கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரில் சென்று அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.
மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி நேற்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றுமாலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் குறித்த போராட்டக்களத்துக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது மக்களிடம் கருத்து தெரிவித்த மனித உரிமை ஆணைக்குழுவினர், இந்த மக்களின் அடிப்படை வாழ்விட உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் ஆராய்வதாகவும் தம்மால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.