vidya caseபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் என அறியப்படும் மாகாலிங்கம் சசிக்குமார் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதாய விளக்க மன்றால் இன்றுமுற்பகல் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகளுக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார்
03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்
04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்
05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்
06 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்
08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன்
09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், தலா 30 வருட ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா வரையில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதலாம் மற்றும் 7ஆம் சந்தேகத்துக்குரியவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பு நீதாய விளக்கமன்றின் மூன்று நீதிபதிகளாலும் ஏகமனதாக வழங்கப்பட்டதாகும். இதற்கு முன்னர், நீதிபதிகள் தங்களது தீர்ப்பு அறிக்கையை தனித்தனியே வாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி பூங்குடுதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற உயர்தர வகுப்பு மாணவி தன் வீட்டிலிருந்து காலை பாடசாலை செல்லும்போது கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த குற்றச் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளினூடாக பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் தவக்குமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார் ஆகிய சகோதரர்கள் மூவரும் 2015ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி ஊர்காவற்றுறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளினூடாக மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், பழனிரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐவரும் 2015ம் ஆண்டு மே 17ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த குற்றச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் மே மாதம் 18ம் திகதி கைதானார். எனினும் அன்றைய தினம் சுவிஸ்குமார் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்ததாக கூறப்படும் நிலையில் பின்னர் வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் சில மாதங்கள் கடந்து ஊர்காவற்றுறை காவற்துறையினர் மேலும் ஒருவரை பத்தாவது சந்தேகநபராக கைதுசெய்திருந்தனர். இதேவேளை குறித்த குற்றச்சம்பவம் தொடர்பான விசாரணையானது 2015ம் ஆண்டு மே மாதம் 20ம்; திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டது. அவர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் ஊடாக இந்த வழக்கின் 11 ஆவது மற்றும் 12 ஆவது சந்தகே நபர்களாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் இது தொடர்பான வழக்கானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கை பரிசீலித்த சட்டமா அதிபர் திணைக்களம், வழக்கின் 12 சந்தேக நபர்களில் 11 வது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் சட்டமா அதிபரினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார். அத்துடன் 10 ஆம் மற்றும் 12 ஆம் சந்தேக நபர்கள் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இதன் பின்னர் இவ்வழக்கின் ஏனைய 9 சந்தேக நபர்களுக்கும் எதிராக ஆட்கடத்தல், சதித்திட்டம் தீட்டியமை, பாலியல் துஸ்பிரயோகம், கொலை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பகிர்வுப் பத்திரமானது சட்டமா அதிபரால் தயார் செய்யப்பட்டது. அத்துடன் பிரதம நீதியரசரால் இவ்வழக்கை விசாரணை செய்ய நீதாய விசாரணை மன்று உருவாக்கப்பட்டது. இதற்கு நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய இரண்டு தமிழ்மொழிபேசும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட நீதாய விசாரணை மன்றில், குறித்த வழக்கு விசாரணையானது கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமானது. அன்றிலிருந்து குறிப்பிட்டகால இடைவெளியில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு கடந்த 13ஆம் திகதி வரை 17 நாட்கள் விசாரணை இடம்பெற்றது. இதன் போது இவ்வழக்கினை சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்துடன் பிரதி மன்றாடியார் நாயகம் குமார்ரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.

இதன்படி இவ் வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவுறுத்தப்பட்டு வழக்கின் தீர்ப்புக்காக மன்றால் திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்றையதினம் காலை 9மணிக்கு தீர்ப்பு வழங்குவதற்காக நீதாய விசாரணை மன்று கூடியிருந்த நிலையில், இன்றுமுற்பகல் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.