இலங்கையின் ஆதரவைப் பெறுவதற்காக, இலங்கையை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுபோன்ற தந்திரோபாயங்கள் தொடரும் என்றும், சீனா இதனைத் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளுடன் உறவுகளை வைத்துக் கொண்டு, சீனா இடையூறு ஏற்படுத்த முனைகிறது. இலங்கை, நேபாளம், மாலைதீவு, பங்களாதேஸ் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளை வென்றெடுப்பற்காக, சீனா பொருளாதார அச்சுறுத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளில் முயற்சிக்கிறது.

இலங்கையில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும், பாகிஸ்தானில் குவடார் துறைமுகத்தையும் சீனா பெற்றுக்கொண்டுள்ளது. இருப்பை நிலைப்படுத்தும் சீனாவின் இந்த முயற்சிகள், ஆசியாவின் இரு பிரதான நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மோசமடையச் செய்யும் என எம்.கே. நாராயணன் எச்சரித்துள்ளார்.