உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் நாளை (10) சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இன்று (09) காலை முதல் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இருந்து இந்த வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 238 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 901 பெண் பிரதிநிதிகள் உட்பட 2736 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 3,89,582 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 457 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக மாவட்டத்திற்குள்ளிருந்தும் வெளியில் இருந்து வருகை தந்துள்ள 4437 உத்தியோகத்தர்கள் இன்று காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 144 வட்டாரங்களில் 124 வட்டாரங்கள் கொத்தணி அடிப்படையிலும் 20 வாக்கு நிலங்களிலும் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.