லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் உலக இலங்கை பேரவை தெரிவித்துள்ளது.

கடந்த பெப்பரவரி 4ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திரதினக் கொண்டாட்டத்தின்போது, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, தமது கழுத்தை காண்பித்து, அவர்களுக்கு சைகையொன்றின் மூலம் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பிரிகேடியர் ப்ரியங்க பெர்னாண்டோ, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின்பேரில் அவர் மீண்டும் பணியில் இணைக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர் தமிழர்களால் உயர்ஸ்தானிகராலய இணையத்தளம் முடக்கப்பட்டதாக தாம் சந்தேகிப்பதாக பிரித்தானியாவில் உள்ள உலக இலங்கை பேரவையின் தலைவர் இந்திக குணவர்தன தெரிவித்துள்ளார்.

இணையத்தள முடக்கம் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடமும், இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தாம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இணையத்தளத்தை மீள செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இந்த விடயத்தை பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லது அவசியமானதாகும் என்று பிரித்தானியாவில் உள்ள உலக இலங்கை பேரவையின் தலைவர் இந்திக குணவர்தன தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.