யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் இன்றுகாலை ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இடம்பெற்றது.

யாழ். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையில் இன்றுகாலை 8.30மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது. ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ கொடிகார, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், மேலதிக அரச அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், பரஞ்சோதி, பிரதேசசபை தவிசாளர் நிரோசன், பிரதேசசபை உறுப்பினர்கள், யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பெறப்பட்ட நிழற்பட பிரதி இயந்திரம், கதிரைகள், இரும்பு அலுமாரிகள் என்பனவும் இந்நிகழ்வில் வைத்து கையளிக்கப்பட்டது.

அத்துடன் பயனாளிகள் இருவருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டதோடு, விழா மேடையில் இரு பதிவுத் திருமணங்கள் இடம்பெற்று சான்றிதழ்கள், பரிசுப்பொருட்கள் மற்றும் உதவித் தொகையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட பல பயனாளிகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ்கள் மற்றும் காணி விடயங்கள் என பல்வேறு சேவைகள் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இதில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொண்டார்கள். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திணைக்களங்கள் ரீதியாக மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளை நேரடியாக பார்வையிட்டு வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தார்.