ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் தெமடகொட பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் இப்ராஹீம் இப்திகார் எனும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் வெல்லவாய, மஹவெல்லகம முஸ்லிம் வீடொன்றின் முன்னாள் வெடிபொருள் ஒன்றை மறைத்துவைக்க முற்பட்ட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளர் தொழுகைக்காக மசூதிக்கு சென்று திரும்பி வரும் போது தனது வீட்டிற்கு முன்னாள் சிலர் சந்தேககத்திற்கிடமான முறையில் நடந்து கொள்தை அறிந்த அவர் உடனடியாக பொலிஸாரிற்கு அழைப்பு விடுத்து குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார், குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்து வெடிபொருள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர்கள் இனங்களுக்கு இடையிலான முறுகலை ஏற்படுத்தவதற்காக குறித்த முஸ்லிம் நபரின் வீட்டிற்கு முன்னாள் வெடிபொருளை மறைத்து வைப்பதற்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றும், புத்தளம், வன்னாத்தவில்லு மற்றும் கற்பிட்டி பகுதியில் நேற்றுக்காலை முதல் நண்பகல் வரை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து, ஒவ்வொரு வீடுகளிலும் விஷேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று புத்தளம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் ஆறு பேரும், கற்பிட்டி நுரைச்சோலை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து பேரும் என மொத்தமாக காலை முதல் நண்பகல் வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதேவேளை, புத்தளம், மதுரங்குளி மற்றும் வண்ணாத்திவில்லு ஆகிய பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். வீடுகள் மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை.

சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் பாதுகாப்பு தரப்பினர்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மாத்திரமின்றி, வீதியில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் இருந்தால் அல்லது நபர்கள் சுற்றித்திரிவதைக் கண்டால் உடனடியாக புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்துவதுடன், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கவும்.

அத்துடன், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட நபர், பயணித்ததாகக் கூறப்படும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை 3 பொலிஸ் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கை மூலம் நேற்று திகாரிய பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடித்துள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நிட்டம்புவ பொலிஸார், கம்பஹா புலனாய்வு பிரிவுடன் இணைந்து நிட்டம்புவ பொலிஸ் நிலைய மோப்ப நாய்களின் உதவியுடன் இன்று திகாரிய பிரதேசத்தில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையையடுத்தே இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கிராமமொன்றில் வாடகை வீடொன்றில் வாகன இலக்கத்தகடு 36 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் இந்த மோட்டார் சைக்கிளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த தற்கொலைக் குண்டுதாரி பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களில் ஒன்றே இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெலிகம- மதுராகொட பிரதேசத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அங்கிருந்த வீடொன்றின் கட்டிலுக்கு கீழே பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மில்லியனுக்கு அதிகமான பணத்துடன் வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பணத்தை சம்பாதித்த காரணத்தை அவர் வெளிப்படுத்த முடியாமல் போனதாலேயே வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை குறித்த வீட்டில் எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர் சவுதியில் கணினி விற்பனை மய்யத்தில் பணியாற்றி வருகிறாரென்றும் அவரது மனைவி கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சந்தேகநபரின் வீட்டைப் பார்க்கும்போது, அவர்கள் வசதியானவர்கள் எனத் தெரியவில்லையென்றும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நாளை மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளாரென பொலிஸார் கூறியுள்ளனர்.