எவ்வித எழுத்து மூல ஆவணங்களுமின்றி அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தல், தேசிய பால் உற்பத்தியை ஊக்குவித்தல், தேசிய உணவுப் பயிர் உற்பத்திக்காக அரச காணிகளை உகந்தவாறு முகாமைத்துவப்படுத்துதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே குறித்த வர்த்தமானி தயாரிக்கப்பட்டது. Read more
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றுஇரவு வீடியோ தொழில்நுட்பம் ஊடாக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது ஐக்கிய நாடுகளின் பொறுப்பு என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அரசாங்கங்களுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதே ஐக்கிய நாடுகளின் பொறுப்பு எனவும் இந்து சமுத்திரத்தில் அமைதியைப் பேணுவதற்காக செயற்படுவதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனது. அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபில் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் கடும்போக்குவாதத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நடைமுறைகள் தோல்வியடைந்தமையே, ஏப்ரல் 21 தாக்குதலுக்கான காரணம் என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று மீண்டும் சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய கடும்போக்குவாதம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு ஆலோசனை வழங்கியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டீ. டெப்லிட்ஸ் இன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பாடசாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆங்கில பாடநெறிகளை நடத்துவதற்கு தூதரகத்தினால் ஒத்துழைப்பு வழங்க முடியும் என இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நானாட்டான் பகுதியில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகளும் சான்றுப் பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. நானாட்டான் சந்திக்கு அருகில் ‘வடக்கு வீதி’ என்னும் இடத்தில் தனியார் காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, குறித்த பொருட்களுடன் பழமையான சட்டி, பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.