இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 114,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 99,153 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 709 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
		    
இலங்கை கடல்பரப்பில் அத்துமீறிய நுழைய முற்பட்ட 86 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டீ சில்வா தெரிவித்துள்ளார். கடல்வழியாக சட்டவிரோதமாக வருபவர்களால் நாட்டுக்குள் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனைத் தடுப்பதற்காக 24 மணிநேரமும் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மன்னார் தெற்கு கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே நாட்டுக்குள் நுழைந்த 11 இந்திய மீன்பிடிப் படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று,  ஆறாவது தடவையாகவும்,  திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து  ஆட்சி அமைத்திட  அறிவுபூர்வாக செயற்பட்டு அடித்தளமிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மத்தெரி ((Yuri Materi) ஆகியோருக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர், ரஷ்ய தூதுவரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்காக 800 குற்றச்சாட்டுகள் அடங்கிய தகவல்கள், சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சுமார் 70 கர்ப்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளார். நேற்று வரையில் அவர்கள் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால், உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை ஒருவாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்வரும் 7ஆம் திகதி வரை திறந்த நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடக்கம் நாட்டில் உள்ள சில மிருகக்காட்சிசாலைகளை தற்காலிகமாக மூடவுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவலை யானைகள் சரணாலயம், பின்னவலை மிருகக்காட்சிசாலை மற்றும் ரிதியகம சஃபாரி பூங்காஆகியவை மறு அறிவித்தல் வரை மூடப்படுமென தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஹிசினி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் இன்றுவரை 1,193 பேருக்கு கொரொனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரு அலைகளின் போதிருந்த மாவட்ட தொற்றுநிலை தலைகீழாக மாறி, திருகோணமலை அதிகூடிய தொற்றையும் அதி குறைந்த தொற்றை கல்முனைப் பிராந்தியமும் கொண்டுள்ளது. கிழக்கில் கொரோனா முதல் அலையில் 23 பேரும் இரண்டாவது அலையில் 3,645 பேரும் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
2021ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 158க்கும் அதிக தொகுதிகளை கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய 10 வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கின்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.