இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் அரசியல் மற்றும் கலாசார உறவுகளுக்கு தமது நாட்டில் ஆதரவை வழங்குவதாகவும்,  எதிர்காலத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்  இலங்கைக்கான  இந்தோனேசிய தூதுவர்  டெவி குஸ்டினா டோபிங்  தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி  விஜயதாச ராஜபக்‌ஷ மற்றும் இலங்கைக்கான  இந்தோனேசிய
தூதுவர்  டெவி குஸ்டினா டோபிங் (Dewi Gustina Tobing) அவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) காலை நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேம்படுத்துவது மற்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன்  யுத்தத்திற்கு பின்னர் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து நீதியமைச்சர் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்துள்ளார்.