சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம், அரசியல் கட்சிகள், மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு கோரலுக்கான திகதியை அறிவிப்பதற்கு முன்பிருந்தே சில தரப்பினர் தேர்தல் நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பில் முரண்பாடான கருத்துகளை வௌியிட்டமை, கட்டுப்பணம் பொறுப்பேற்பதை இடைநிறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியமை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் சில ஊடகங்கள் போலியான தகவல்களை வௌியிட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் இவற்றில் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான கருத்துகள் மற்றும் சிக்கல்களை உருவாக்கும் செயற்பாடுகள் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு இடையூறாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்தி தேர்தலை உரிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.