தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்

prisonersthirddayfastபயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழ் அரசியல் கைதிகளை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அவர்களின் விடுதலை மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
மிக நீண்டகாலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு கட்டம் கட்டமாக பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
தீபாவளி தினமான நேற்று இவர்களில் சிலரை கொழும்பில் சந்தித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன், அவர்களில் 32 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்படுவர் எனக் கூறியதாக பிளாட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.இதை சிறைச்சலைகள் ஆணையர் ரோகன் புஷ்பகுமாரவும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
‘இனவாத நோக்கம்’
ஆனால் கொழும்பு மகசின் சிறையிலிருந்து நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட 21 கைதிகளை பிணையில் விடுவிக்க உரிய பரிந்துரைகள் சட்டமா அதிபரிடமிருந்து வரவில்லை என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களை எதிர்வரும் 24ஆம் தேதி வரை மேலும் விளகமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அரசு இனவாத நோக்கத்துடன் செயல்படுகிறது என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளரும் பாதிரியாருமான சக்திவேல் தெரிவித்தார்.
பிணையில் விடுதலையை எதிர்பார்த்து நீதிமன்றம் சென்ற கைதிகள் ஏமாற்றத்துடன் சிறைச்சாலை திரும்பினர்.
பிபிசி செய்தி