sadaகிழக்கு மாகாணத்தில் ஆசிரிய நியமன பரீட்சையில் சித்தியடைந்தும் தமக்கான நியமனம் வழங்கப்படாததை கண்டித்தும் தமக்கான நியமனத்தை வழங்குமாறு கோரியும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரிக்கு முன்பாக பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று விவேகானந்தா கல்லூரியில் 222 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படுகின்ற நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் நியமனங்களுக்கு பரீட்சை செய்யப்பட்டு சித்தியடைந்த பட்டதாரிகளில் ஒரு பகுதியினரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 2013ஆம் ஆண்டிற்கான ஆசிரிய நியமன இடைவெளியை பூர்த்திசெய்யும் வகையில் பட்டதாரிகளுக்கு பரீட்சை நடாத்தப்பட்டது. இந்த பரீட்சையில் 305 பட்டதாரிகள் சித்தியடைந்த நிலையில் 270 பேருக்கு நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த 270 பேரில் 222 பட்டதாரிகளுக்கு மட்டுமே நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனம் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து 5700 பட்டதாரிகள் இந்த பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 305 மாணவர்கள் சித்திபெற்றதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதிலும் பல்வேறு வெட்டுக்குத்துகளுக்கு மத்தியில் 222 பேருக்குமட்டும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிங்கள மாணவர்கள் 600பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 61பேர் பரீட்சையில் சித்தியடைந்துள்ள போதிலும் 58பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். 2013ஆம் ஆண்டுக்கான நியமன இடைவெளியை பூர்த்தி செய்வதற்கே இந்நியமனம் வழங்கப்படுவதாகவும் அதன் பின்னரான 2014, 2015, 2016 நியமன இடைவெளியை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அதற்குள் ஏனைய பட்டதாரிகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர், கல்வியமைச்சர் ஆகியோர் பேச்சுவ நடாத்திய போதிலும் வெற்றிபெறாத நிலையில் குறித்த பட்டதாரிகளை இன்றுமாலை ஐந்து மணியளவில் சந்திப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.