kidnap caseகொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக நேற்று திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.கடற்படை வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்துவரப்பட்ட சந்தேகநபர், சக்கர நாற்காலியில் அமர வைத்து திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் 25 கடற்படை உறுப்பினர்களிடம் கடந்த சில நாட்களாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதின்றத்தில் அறிவித்தனர். இந்த வாக்குமூலம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த தவணையின்போது மன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.