மஹிந்த போட்டியிட்டால் நான் போட்டியிட மாட்டேன்- சரத் பொன்சேகா-
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்வதாகவும், அதற்காக கிடைக்கப்பெறும் விருப்பங்கள் மிகவும் பலமானதாக அமைந்திருக்கவேண்டும் என்றும் ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும்படி தன்னிடம் ஐ.தே.கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின், நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம். காரணம் மூன்றாவது தடவையாக போட்டியிடுவதற்கு சட்டபூர்வ உரிமையோ அல்லது தார்மீக உரிமையோ அவருக்கில்லை. அது ஒரு சட்டவிரோத தேர்தலாகவே கருதப்படும். எப்படியும் நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டோமாயின், அது எமது கட்சியை பாதிக்கும். எனவே கட்சியை முன்னேற்றுவதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் சரியான முறைமையை நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சரத் பொன்சேகா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக ஆட்சியை கலைக்குமாறு கோரிக்கை-
தமிழகத்தில் நிலவும் சட்ட – ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாக ஆட்சியை கலைக்கும்படிமனு கையளிக்கப்படவுள்ளதாக திராவிட முன்னேற்ற கழகம் தெரிவித்தள்ளது. இது தொடர்பில், தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மனு கையளிக்கவுள்ளதாக திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக, கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் இடம் பெற்ற போராட்டங்களை ஆய்வு செய்துள்ளதாக தி.மு.க தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழக அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டவும் திராவிட முன்னேற்ற கழகம் தயாராகி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டு-
சுமார் 20 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஒன்றறை வயது சிறுவனான சிவக்குமார் சிந்துஜனைக் காப்பாற்றிய இராணுவத்தினர் இருவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் கடமையாற்றும் 57வது படையணி, 3வது கஜபா ரெஜிமென் அதிகாரிகள் கடந்த 2ம்திகதி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது குழந்தை கிணற்றில் விழுந்து விட்டதாகவும், அதனைக் காப்பாற்றுமாறும் குறித்த இராணுவத்தினரிடம் உதவி கோரியுள்ளார். இதனையடுத்து கோப்ரல் விஜித பெரேரா மற்றும் கோப்ரல் டீ.எம்.லீலாரத்ன ஆகியோர் கிணற்றில் குதித்து சிறுவனைக் காப்பாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை வாசிக்க… Read more
யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று 07.10.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது, இதன்போது ஆசிரிய, ஆசிரியைகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்றுக் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின்போது புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியுதவியில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான நினைவுப் பொருட்களை புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த திரு. லோகன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆணைக்குழுவின் சட்டத்தின் 393 ஆம் சரத்தின் 4ஆம் பிரிவின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய 2013 ஆகஸ்ட் 15ஆம் திகதி 1855ஃ19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கான காலப்பகுதி 1990ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரை என வரையறை செய்யப்பட்டிருந்தது. எனினும் குறித்த வரையறை இந்திய இராணுவ ஆட்சிக்காலம் 1983ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கிழக்குமாகாணத்திலுமாக 7தடவைகள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் ஆரம்பமாகி இவ்வாண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் ஒரு வருடத்தை ஆணைக்குழு அடைந்திருந்த நிலையில் அதன்கால எல்லை நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆணைக்குழுவின் செயற்பாட்டு காலத்தை 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.