Header image alt text

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 435 முறைப்பாடுகள்-

election violenceபொதுத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 435 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிட்டது. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு தொடர்பில் 133 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய, போஸ்டர் மற்றும் கட்டவுட் ஆகியவற்றை காட்சிப்படுத்தியமை தொடர்பில் 81 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேசிய ஒற்றுமையை பாதுகாக்க ஆணை வழங்குங்கள்-பிரதமர் ரணில்-

ranil01தேசிய ஒற்றுமையை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரத்தை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். நல்லாட்சியின் கீழ் அனைத்து இன மக்களும் இன்று ஒத்துழைப்புடன் வாழ்வதாக பிரதமர் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். எனவே, எதிர்வரும் 17ஆம் திகதி ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு பெரும்பான்மை விருப்பு வாக்கை பெற்றுக்கொடுத்து ஆணையை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்தார். எந்தவொரு நபரும் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேர்வின் சில்வா, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைவு-

mervinமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசிய முன்னணியுடன் நேற்று இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் களணி தொகுதி அமைப்பாளரான மேர்வின் சில்வா, நல்லாட்சியின் பொருட்டு தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டார். கிரிபத்கொட சுதர்ஷணராம விஹாரையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் அவர் இவ்வாறு இணைந்து கொண்டார். இந்நிகழ்வில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பெவன் பெரேராவும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு கருத்துரைத்த மேர்வின் சில்வா, நல்லாட்சியின் பொருட்டு தாம் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.

அவிசாவளை விபத்தில் 50ற்கும் மேற்பட்டோர் காயம்-

accidentகொழும்பு, அவிசாவளை – கொஸ்கம, சாலாவ பகுதியில் தனியார் பஸ்சொன்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸ_ம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 50ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். எம்பிலிபிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸ_ம் கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸ_ம் நேருக்கு நேர் மோதியுள்ளன. இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தோர் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையோர் கொஸ்கம அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் பட்டியலில் இலங்கைக்கு 2ஆம் இடம்-

swissசுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 06 மாத காலங்களில் 11,000 பேருக்கும் அதிகமானோர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அதே காலத்தில் சுமார் 840 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 06 மாத காலத்திற்குள் எரித்திரியாவிலிருந்தே அதிகளவான அதாவது 3800 புகலிடம் கோரிய விண்ணப்பங்கள் கிடைத்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த 06 மாத காலத்தில் இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டையும் விட 76.5 வீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி மேற்கு தவிசாளர் அன்னை சாரதாதேவி பாடசாலைக்கு விஜயம்-(படங்கள் இணைப்பு)

P1060943யாழ். வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கிளிநொச்சி அன்னை சாரதாதேவி பாடசாலைக்கு ஆடிப் பிறப்பன்று விஜயம் செய்தார். இதன்போது வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளரால் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தாயக உறவுகளை தலைநிமிரச் செயவோம் என்ற செயல் திட்டத்தின்கீழ் பிரிட்டன் வாழ் தமிழ் உறவான வைத்திய கலாநிதி சங்கர் அவர்களால் தனது மாமியாரின் பிறந்த நாள் நினைவின் பொருட்டு அனுப்பிவைக்கப்பட்ட ரூபா 15000-த்தினை குறித்த பாடசாலையிடம் ஒப்படைத்த வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் குறித்த பாடசாலை மாணவர்கட்கு அன்றைய தினம் ஆடிக்கூழ் மற்றும் கொழுக்கட்டைகளை வழங்கி குறித்த மாணவர்களுடன் இணைந்து தானும் உண்டு மகிழ்ந்தார்.

Read more

கைதடி பகுதியில் தேர்தல் பிரசார கருத்தரங்கு-(படங்கள் இணைப்பு)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் 20.07.2015 அன்று யாழ் கைதடிப் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் தேர்தல் பிரசாரப் பணிகளில் இணைந்திருந்தார். 

DSC_0295

Read more

தேர்தல் தொடர்பில் 234 முறைப்பாடுகள் பதிவு-

election violenceபொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 234 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது. சில மாவட்டங்களில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பிரசார நடவடிக்கைகள் தொடர்பான 18 முறைப்பாடுகளும், அரச சொத்துக்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 53 முறைப்பாடுகளும் பதிவானதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், நாட்டின் பல பகுதிகளிலும் மதுபானம் விநியோகிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான பாரிய சம்பவங்கள் எதுவும் தமக்கு பதிவாகவில்லை எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பட்டார். இதேவேளை, பொருட்கள் விநியோகிக்ப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கும் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பு தெரிவிக்கின்றது. இந்த நிலையில், பொதுத் தேர்தல் தொடர்பில் 199 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.

சிவிலுடையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் விடுதலை-

courts (1)சாதாரண உடையில் கைதுப்பாக்கியுடன் வேனில் பயணித்த மூன்று இராணுவ வீரர்கள் கொழும்பு நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹானயில் இருந்து நுகோட கம்சபஹா சந்தி வரை சென்று கொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இராணுவ வீரர்கள் பயணித்த வேனின் இலக்க தகடு தொடர்பில் பிரச்சினை நிலவுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அவர்கள் மேஜர் ஜெனரால் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ருவன் குணசேகர கூறியுள்ளார். இது தொடர்பில் இராணுவ பொலிஸாரிடம் அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த மூன்று இராணுவ வீரர்களும், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் சயனைட் குப்பிகளுடன் முன்னாள் புலி உறுப்பினர் கைது-

arrest (2)சுமார் 75 சயனைட் குப்பிகள் மற்றும் 300 கிராம் சயனைட்டுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என கருதப்படும் ஒருவர் நேற்று தமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பாதை வழிகாட்டலுக்கு உதவும் நான்கு ஜீபிஎஸ் கருவிகள், 7கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 39 வயது மதிக்கத்தக்க கே. கிருஸ்ணகுமார் எனப்படும் குறித்த நபர் 1990ஆம் ஆண்டுகளில் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டுள்ளார். பின்னர் 2009ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவரிடமிருந்து இலங்கை மற்றும் இந்திய நாணய தாள்களும், இரு நாடுகளிலும் பயன்படுத்தக் கூடிய வெள்வேறு சாரதி அனுமதி பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இலங்கை தமிழரை தமிழகம் உச்சிபுளிக்கு அழைத்து வந்த இரண்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்த இவர், கடல் வழியாக யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மன்னார் கல்லாறு விபத்தில் மூவர் உயிரிழப்பு-

accidentபுத்தளம் – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஓன்று மன்னார் சிலாவற்துறை கல்லாறு பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் ஸ்தலத்திலேயே இருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாயுள்ளார். பலியானவர்கள் அனைவரும் ஆண்களாவர். காயமடைந்த மேலும் 11பேர் மன்னார் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருநாள் பண்டிகைக்காக புத்தளம் சென்று திருப்பியவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மன்னார் பெரியமடு பகுதியை சேர்ந்தவர்களாவர்.

ஜூலை 30க்கு முன் சொத்து விபரங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்-

election.....இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை ஜூலை 30ம் திகதிக்கு முன்னர் சம்ர்பிக்குமாறு தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. அதனடிப்படையில் தற்பொழுது மாவட்ட மட்டங்களில் வேட்பாளர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இந்தமுறை தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிக்காட்டும் நிதி அறிக்கையை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு வேட்பாளர்அடையாள அட்டைகள் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது. தமது சொத்து விபரங்களை சமர்பிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் இந்த வேட்பாளர் அடையாள அட்டையை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர்க்கு வட்டு இந்து வாலிபர் சங்கமூடாக உதவி-

photo 5 (2)வவுனியா உயிரிழை அமைப்பில் வட கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 163 பேர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு கழுத்து மற்றும் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் வாழ்வா சாவா என்ற போரட்டத்தில் துடித்து வருகின்ற நிலையில் இவர்கள் உறங்குவதற்கும், இருப்பதற்கும் கூட பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள் இவ்நிலையில் உயிரிழை அமைப்பினர் அவர்களுக்கான மெத்தைகள் மற்றும் அடிப்படையான மருத்துவ வசதிகளை தந்துதவும்படி வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனடிப்படையில் நாம் முதற்கட்டமாக கனடாவினை சேர்ந்த தனயசிங்கம் பரமநாதன் அவர்களின் நிதி அனுசரனையுடன் சுமார் 57000 ரூபா பெறுமதியான 17 மெத்தைகளை வழங்கியிருந்தோம். இங்கு பாதிக்கப்பட்டுள்ளவார்கள் முன்னைய காலத்தில் எமக்காக பல தியாகங்களை செய்தவர்கள் என்பதனை மறந்திடமால் எமது அமைப்பின் ஊடாக தாயக உணர்வுள்ள நண்பர்களிடமும், பொது மக்களிடமும் இவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை செய்யும்படி தாழ்மையாக கேட்டிருந்தோம். இதனடிப்படையில் இன்று (20.07.2015) படுக்கை புண்ணினால் பாதிப்புற்று உயிருக்காக போராடிவரும் 15 பேருக்கு water mattress care, provide iodine solution(mdcom), gauze roll, sodium chloride IV soln, zinc oxide plaster  என்பனவற்றினை வழங்கியுள்ளோம்.

Read more

சுன்னாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)

DSC01889தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்று (19.07.2015) யாழ். சுன்னாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான கூட்டம் வலிதெற்கு கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் திரு. குமாரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. கௌரிகாந்தன், வலிமேற்கு சமூக மேம்பாட்டு இணைய ஆலோசகர் திரு. டேவிட், முன்னாள் கிராம சேவையாளர் திரு. பரமநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் ஊர்ப் பெரியோர்களும், சமூக ஆர்வலர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

இங்கு உரையாற்றிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையின் பலத்தைக் காட்ட வேண்டிய ஒரு தருணம் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. எனவே நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தலிலே 20ற்கும் மேற்பட் ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்று ஒரு பலம்மிக்க சக்தியாக நிற்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இதன்மூலமே வருகின்ற அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தினை தட்டிக்கழிக்க முடியாத நிலைமை ஏற்படும்.

Read more

யுத்த காலத்தில் மக்கள் இடம்பெயராத வகையில் வவுனியாவை பாதுகாத்தோம்- வேட்பாளர் க.சிவநேசன் (பவன்)-

newssssssதமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருப்பதன் மூலமே அங்கத்துவ கட்சிகள் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக செயற்பட முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வன்னித் மாவட்டதில் போட்டியிடும் புளொட் அமைப்பின் வேட்பாளர் திரு கந்தையா சிவநேசன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள அறிவொளி அகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் இயக்கம் வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுகின்றது. வன்னி மாவட்டம் எல்லைப் பிரதேசமாக இருந்ததால் இங்கு பல அபிவிருத்தி திட்டங்களை நாம் செய்திருக்கிறோம். யுத்த காலத்தில் இப் பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயராத வகையில் தமிழ் பிரதேசமாக வவுனியாவை நாமே பாதுகாத்துள்ளோம். இங்குள்ள பல அபிவிருத்திகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். Read more

வலது குறைந்த வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்-

electionவலது குறைந்தவர்கள் வாக்களிக்கச் செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கினால் வசதிகளைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கென ஓகஸ்ட் 9ம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும். வலது குறைந்தவர்கள் வாக்களிக்கச் செல்லவென வாகன வசதி கோரி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வைத்தியரிடம் பெறப்பட்ட சான்றுடன் தேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி கையளிக்க முடியும் என செயலகம் குறிப்பிட்டுள்ளது. தெரிவத்தாட்சி அதிகாரியின் தீர்மானத்தின்படி வலது குறைந்தவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

160 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில்-

electionஎதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான கண்காணிப்பு பணிகளுக்காக 160 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் அதிகளவானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கண்காணிப்பாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுமார் 70 கண்காணிப்பாளர்கள் இவ்வாறு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தக் குழுவின் ஓரு தொகுதியினர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் கண்காணிப்பு காரியாயலம் ஒன்றையும் அமைக்கவுள்ளது. இதற்கு மேலதிகமாக தேர்தல் கண்காணிப்பு மற்றும் தெளிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மூன்று உள்ளுர் நிறுவனங்களுக்கு 1.2 மில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.

வலி மேற்கிற்கு 80லட்சம் பெறுமதியான பெக்கோ வாகனம் கையளிப்பு-

P1060357யாழ். வலி மேற்கு பிரதேச சபைக்கு ஏறத்தாழ 80 இலட்சம் ரூபா பெறுமதியான பெக்கோ வாகனம் கொழும்பில் வைத்து வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சனி ஐங்கரன் அவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது. சிறிது காலத்திற்கு முன்னதாக வலி மேற்கு பிரதேச சபைக்கு 8000 லீட்டர் கொள்ளளவுடைய நீர்த்தாங்கி மற்றும் ரோலர் வாகனங்களும் வலி மேற்;கு பிரதேச சபை தவிசாளிடம் கையளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.

தமிழகத்தில் வீரமக்கள் தின சுவரொட்டிகள்-(படங்கள் இணைப்பு)

received_1609877265959929கடந்த 16.07.2015 அன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் (புளொட்) அனுஷ்டிக்கப்படும் 26வது வீரமக்கள் தினத்தினை முன்னிட்டு, இந்தியாவின் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அகதி முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் குறிப்பாக மதுரை, சென்னை, சேலம், இராமநாதபுரம் ஆகிய பிரதேசங்களில் “வீரமக்கள் தின” சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டதுடன், “வீரமக்கள் தின” துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

Read more

நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வெற்றியே முக்கியம்-ஆ.யதீந்திரா-

jathiஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டு வெல்வதல்ல முக்கியம், நாம் பிரதிநித்துவப்படுத்தும் மக்களின் வெற்றியே முக்கியமென திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அரசியல் ஆய்வாளரும் இளம் வேட்பாளருமான ஆ.யதீந்திரா தெரிவித்துள்ளார். திருமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்ற நிலையில், நேற்றையதினம் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டமொன்று திருமலையிலுள்ள சில்வெஸ்டர் உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருமலையில் இம்முறை இரு ஆசனங்களை வெற்றிகொள்ள வேண்டுமென்னும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோரிக்கை தொடர்பில் பேசியபோதே யதீந்திரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read more

கிளிநொச்சி சிறுமி யர்ஷிகா சடலமாக மீட்பு-

deadbody-1கடந்த ஜூன் 21ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியின் சடலம், குறித்த சிறுமி காணாமல்போன இடத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொறிக்கடவை வயல்வெளியிலிருந்து நேற்று மீட்கப்பட்டது. குறித்த வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது எனவும் அச்சிறுமி காணாமல் போனபோது அணிந்திருந்த ஆடை, அலிஸ்பாண்ட் மற்றும் செருப்பு ஆகியனவும் அச்சிறுமி புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர். மேற்படி சிறுமியின் சடலம் குறித்த பகுதியில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், அச்சடலம் சிறுமி யர்ஷிகாவினுடையது என அவர் அணிந்திருந்த ஆடைகள் மூலம் அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். மேற்படி கிராமத்திலுள்ளவர்கள் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் குளிப்பதற்காக தினமும் சென்றுவருபவர்கள். Read more