அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் இலங்கைக்கு விஜயம்-
மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பிலான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். ஒருநாள் விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டுக்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதே அவரின் இந்த விஜயத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இதன்போது நிஸா பிஸ்வால் ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே அவர் சில வாரங்களுக்கு முன்னர் இந்த விஜயத்தை மேற்கொள்விருந்தார். எனினும் தேர்தல்கள் காரணமாக விஜயம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
காணி விடுவிப்பை இனவாதிகள் பிழையாக பிரசாரம் செய்கின்றனர்-ஜனாதிபதி-
தென்னிலங்கை மக்களை காட்டிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் அதிக நெருக்கடியான நிலைமையில் வாழ்ந்து வருவதை தாம் அறிவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சம்பூரில் காணி உரிமைகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார். தென்னிலங்கையில் வசிக்கின்ற மக்கள் அனுபவிக்கின்ற அனைத்து சலுகைகளும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அத்துடன் யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைகொள்ளப்பட்ட பொது மக்களின் காணிகள் படிப்படியாக அவர்களுக்கே திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் போது, அதனை இனவாதிகள் சிலர் தவறான முறையில் பிரசாரம் செய்து வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிப்பதை ஏற்கமுடியாது-
தேர்தலில் தோல்வியுற்றவர்களை தேசியப் பட்டியல் லம் தெரிவுசெய்வது தார்மீக அடிப்படையிலானது அல்ல என கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் சட்டத்தின்படி அது சட்டவிரோதம் இல்லை எனினும் தார்மீக அடிப்படையில் அது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஏழு பேரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இருவரும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து தலா ஒருவருமாக இம்முறை 11 பேர் தேர்தலில் தோற்ற நிலையில் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லிபிய கடற்பிராந்தியத்திற்கு அப்பால் 2ஆயிரம் அகதிகள் மீட்பு-
லிபிய கடற்பிராந்தியத்திற்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த கப்பல்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகளும் அகதிகளும் மீட்கப்பட்டுள்ளனர். இத்தாலிய கரையோர காவல் படைத்தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் துரித நடவடிக்கையின் போது இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 இற்கும் மேற்பட்ட படகுகளில் இருந்து வெளியான ஆபத்து உதவி வானொலி சமிக்ஞக்கு அமையவே இவர்கள் மீட்கப்பட்டதாக இத்தாலிய கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். ஒரே நாளில் இந்த எண்ணிக்கையிலான சட்டவிரோத பயணிகள் மீட்கப்பட்டமை இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையான பயணிகளுடன் மற்றும் கடல்பயணத்திற்கு உகந்ததல்லாத படகுகளில் பயணித்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வருடத்தில் மட்டும் மரணித்துள்ளனர்.
சம்பூரில் காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதியால் கையளிப்பு-
திருகோணமலை, சம்பூரில் இடம்பெயர்ந்த 234 குடும்பங்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையளிக்கப்பட்டுள்ளது. அரசினால் கையகப்படுத்தப்பட்ட 818 ஹெக்டேயர் பொதுமக்களின் காணி நேற்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியினால் காணி உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள காணியை சுத்தம் செய்வதற்காகா 13,000 ரூபா பணத்தை அரசினூடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு தலா 25,000 ரூபா பணமும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் ஆராயவுள்ளதாகவும் சம்பூர் மக்களை சந்தித்த போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஒரே கண்ணோட்டத்தின் கீழ் ஆராய்ந்து அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
மீசாலையில் மோட்டார் குண்டு மற்றும் கைக்குண்டு மீட்பு-
யாழ். தென்மராட்சி மீசாலை ஏரம்பு வீதியிலுள்ள காணியிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இக் குண்டு நேற்றுமாலை கண்டெடுக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாக்கேணி எனும் இடத்தில் நேற்றுமாலை கைக்குண்டு ஒன்றினை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த கிராமத்தில் உள்ள ஆலய உற்சவத்தினை முன்னிட்டு பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணியின்போது, பனை மரம் ஒன்றின் அடிப்பகுதியில் இருந்து குறித்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் ஊடாக குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவுக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்-
தேர்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட பரீட்சைகள் நாளை ஆரம்பமாகி செப்டம்பர் 8ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது. பரீட்சைகளில் முறைகேடு இடம்பெற்றால் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுள்ளார். இதனைவிட பரீட்சைகள் திணைக்களத்தின் தெலைபேசி இலக்கங்களான 0112 784208 அல்லது 0112 784537 என்ற இலக்கங்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாட்டினை பதிவுசெய்து கொள்ளமுடியும். இவ்வாறு பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார சுட்டிக்காட்டினார்.