துயர் பகிர்கின்றோம்!!!
அமரர் கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பு)
 புங்கை நகர் ஈன்றெடுத்த
புங்கை நகர் ஈன்றெடுத்த 
புனிதமான மைந்தனே!
கழகம் கண்டெடுத்த 
கண்ணியமான தோழனே! எம் இனிய சுப்புவே!
கடந்து சென்ற நாட்கள் தொடக்கம்
நகர்ந்து செல்லும் இந் நாழிகை வரை
நம் தேசத்தின் விடுதலைக்கு…
எம் மக்களின் விடிவிற்கு…
“புதிய பாதை” ஒன்றே
பொருத்தமானதெனத் தேர்ந்து
ஆரம்ப நாட்களிலேயே 
கழகத்தில் இணைந்து கொண்ட 
எம்மருமைத் தோழரே!காலமிட்ட கட்டளையால் 
கடல் கடந்து புலம்பெயர்ந்தும்
கடைசிவரை ஓயாது ஒழியாது
ஒரு கணமும் அயராது
மக்கள் பணி செய்தீர்,
தளத்தில் சுனாமி வந்தபோது – புலத்தில்
சூறாவளிபோல் சுழன்று 
உதவிகள் பல சேகரித்து 
உடனேயே அனுப்பினீர்!
முள்ளிவாய்க்கால் முடிவுற்று
இரத்தமும் சதையுமாய் 
வைத்தியசாலை கிடந்தவர்க்கு 
பால்மாவும் பழவகையும் கொடுத்துதவ
பெரும் பங்களிப்பு செய்தீர்!
இன்னும் எத்தனை எத்தனை….
;
தேசத்தில் வாழ்கின்ற 
மக்களின் துயர்துடைக்க நேரில் வந்து
ஆறுதலும் அரவணைப்பும் செய்து
வாரங்கள் ஆகவில்லை!
காலனவன் உமையழைக்க 
காரணம் என்னதுவோ
உமையெண்ணி கழகத்தார் நாம்
கலங்கி அழுகின்றோம்.
தோழரே! 
எமக்கு நம்பிக்கை நாற்றாக 
நீங்கள் இருந்தீர்கள் – எம்
உணர்வுகளுக்கு உறுதுணையாகவும் இருந்தீர்கள் 
என்ன சொல்லி தேறுவதென்று 
எதுவுமே தெரியவில்லை….
விடிவை எதிர்பார்த்த தோழரின் வாழ்வு
எதிர்பாரா நேரத்தில் முடிவாகிப் போனது வேதனை.
தோழரே! 
புயல் என்றும் ஒளிரும் நட்சத்திரங்களை அழிப்பதில்லை
உங்களின் இனிய நினைவுகள் 
எங்கள் மனதிலும் 
பாரெங்கும் வாழும் எம் 
உறவுகளின் உள்ளங்களிலிருந்தும் 
என்றும் மாறாது மறையாது.
தோழரே!
உங்கள் இலட்சியங்களை நாம் சுமக்கிறோம் – அது
ஈடேறும்வரை தொடர்ந்து பயணிப்போம்!
அதுவே உங்களுக்கு நாம் செலுத்தும் 
உண்மையான கௌரவம் என்பதை நாம் அறிவோம்.
விம்மும் நெஞ்சங்களுடன் விடை தருகிறோம்
துயரின்றி போய் வாருங்கள்!!!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
 
		    