கடந்த 1987ஆம் ஆண்டு ஐனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈழத்தை உலுக்கிய முக்கிய சம்பவங்களுள் ஒன்றான கொக்கட்டிச்சோலை படுகொலைக்கு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தன.
அன்று பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி குடிமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டபோது கொக்கட்டிச்சோலை பிரதேசமே இரத்த வெள்ளத்தில் படிந்தது. காலங்கள் எத்தனை கடந்து போனாலும் பிரதேச மக்கள் இப்படுகொலை நடந்த நாளை கரிநாளாக பிரகடனம் செய்து வருடாந்தம் துக்கதினமாக அனுஸ்டித்து வருகின்றனர். கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 30ஆம் ஆண்டு நினைவுதின நிகிழ்வு கொக்கட்டிச்சேலை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் இன்று பிற்பகல் 2 மணியளவில் மலரஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதோடு, உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக ஆலயங்களில் விஷேட பூஜைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலைக்கு உள்ளானவர்களின் உறவினர்கள் ஆகிய பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய ச.வியாளேந்திரன் பா.உ அவர்கள், இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி 2007ம் ஆண்டு முற்பகுதியில் இடம்பெற்ற இடப்பெயர்வு நேரத்தின்போது அழுக்கு நெஞ்சங்களின் செயற்பாடு காரணமாக சேதமாக்கப்பட்டாலும், பிரதேச மக்களின் மனங்களிலிருந்து இப்படுகொலை சம்பவத்தை நினைவிலிருந்து என்றுமே அகற்ற முடியாது. இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்திப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் அஞ்சலியாக அமையும் என்று தெரிவித்தார்.