கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தினை கண்டித்தும் மற்றும் புதிதாக திறந்துவைக்கப்பட்ட வவுனியா பேருந்து நிலையம் பயன்படுத்த முடியாமல் இருப்பதனை கண்டித்தும் நாளையதினம் வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளது.
நாளைகாலை 7 மணியளவில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள போராட்ட குழுவினர் யாழ் மாவட்ட போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருக்கு மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளனர். இது தொடர்பாக யாழ் மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெங்காதரன் கூறுகையில், கடந்த வாரம் யாழ் மாவட்ட தனியார் பேருந்து போக்குவரத்து சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து போக்குவரத்துச் சங்கத்தின் குறித்த போராட்டம் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்போது வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையில் முடிவுகள் எடுக்கப்படும்போதும், யாழ் மாவட்ட தனியார் பேருந்து போக்குவரத்து சங்கத்தின் உறுப்பினர்களை அவர்கள் அழைப்பதும் இல்லை கண்டுகொள்வதும் இல்லை.
எனவே வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவு கொடுப்பது என்பது சாத்தியமற்றதொன்றாக சங்கத்தின் சக உறுப்பினர்கள் கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.