imagesமுல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்படும் என கூறியிருக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், மக்களுடைய காணிகளை மக்களிடம் வழங்க படையினர் கேட்கும் 5 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் வழங்கும் எனவும் மேலதிக காணி விடுவிப்பு தொடர்பில் 24ம் திகதி பேச்சுவார்தை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பனம்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறப்பு விழாவுக்காக யாழ்.வந்த அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனிடம் கேப்பாவிலவு மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், கேப்பாபிலவு கிராமத்தில் படையினரிடம் உள்ள 399 ஏக்கர் நிலம் மக்களிடம் வழங்கப்படவுள்ளது.அதேபோல் அந்த காணிகளில் உள்ள படையினரின் கட்டிடங்களை அகற்றி மாற்று இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக படையினர் 5 மில்லியன் ரூபாய் நிதியை கேட்டுள்ளனர். அந்த நிதியை அரசாங்கம் வழங்கும். அதேபோல் எதிர்வரும் 24ம் திகதி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், படை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளேன்.

இந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் மக்களுடைய காணிகளை எப்போது விடுவிக்கலாம் என்பதை மக்களுக்கு அறிவிக்கவுள்ளோம். இதேபோல் 77 ஆயிரம் பொருத்து வீடுகளுக்கு எமக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனடிப்படையில் முதலில் 6 ஆயிரம் வீடுகளை அமைக்க உள்ளோம். அது பிடித்திருந்தால் மேலதிக வீடுகள் வழங்கப்படும்.

அதேபோல் 93 அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.