sri lankan refugees australiaஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுகின்றனர்.

மானஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், இரண்டு குழுக்களாக இந்த வாரம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்திற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள 1250 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளனர். இந்த திட்டத்துக்கு புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதலில் எதிர்ப்பைத் தெரிவித்தாலும், பின்னர் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் வெளியிட்டார். இதனை அடுத்து அமெரிக்க அதிகாரிகள் மானஸ் மற்றும் நவுறு தீவுகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளை நேர்கண்டு தெரிவு செய்தவர்கள் கட்டம் கட்டமாக அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளனர்.

இதன்படி முதல் 50 பேர் இந்த வாரம் அமெரிக்காவின் அரிசோனா, டெக்ஸாஸ், கலிஃபோர்னியா, ஒரிகன் மற்றும் நியுயோர்க் உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்றப்படவுள்ளதாக, அவுஸ்திரேலிய அகதிகள் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. அதேநேரம் அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் 54 பேருக்கான அறிவித்தல் இந்த வாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.