 அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது. நாட்டில் தற்போதுள்ள இனவாத முரண்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்திய பின்னர் வெகு விரைவில் அவசரகால சட்டம் நீக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது. நாட்டில் தற்போதுள்ள இனவாத முரண்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்திய பின்னர் வெகு விரைவில் அவசரகால சட்டம் நீக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 
நாட்டில் கடந்த காலங்களில் இருந்து இனவாதக் கலவரங்கள் இடம்பெற சிங்கள பௌத்த இனவாதமே காரணமாகும். தமிழர்கள் நெருக்கடியை சந்திக்கவும் இதுவே காரணமாகும். ஆகவே முதலில் சிங்கள பௌத்த இனவாதத்தை கட்டுபடுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அவசரகால சட்டம் நீக்கப்படுவது குறித்தும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் 
இந்த நாட்டில் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எம்மை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் நோக்கத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். முன்னைய ஆட்சியின் ஊழல், குற்றங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறித்து உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுகொடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்கமே மக்கள் மத்தியில் இருந்தது. 
ஆகவே அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை எம்மத்தியில் உள்ளது. அதேபோன்று இப்போதைய ஆட்சியில் நடந்த குற்றங்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் முன்னைய ஆட்சியில் குற்றவாளிகளை தண்டிக்க முடியவில்லை. ஆனால் நாம் குற்றவாளிகளை தண்டிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளோம். பிரதமர் சட்டத்திற்கு கட்டுப்பட்ட காரணத்தினால் தான் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்தார்.
இவை முன்னைய ஆட்சியில் ஒருபோதும் இடம்பெற்றவில்லை. சட்டத்தினை ஆட்சியாளர்கள் கைகளில் வைத்திருந்தனர். அதனை எவரும் மறந்துவிடக்கூடாது. மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்து விமர்சிக்க இடம் இன்று உள்ளது. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கும் வரை செயற்படுவோம். அதேபோன்று மத்திய வங்கியுடன் தொடர்புபட்ட முன்னைய ஆட்சியாளர்களின் குற்றங்களுக்கும் தண்டனை வழங்கப்படும்.
இந்த அரசாங்கத்தில் இனவாத தூண்டுதல்கள் இடம்பெறவில்லை. எனினும் ஒரு சிலர் தமது அரசியல் தேவைக்காக மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை கையாள்கின்றனர். கண்டி இனவாத சம்பவம் குறித்து உடனடியாக அரசாங்கமாக நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அவசரகால சட்டத்தை பிரயோகித்து அதன் மூலமாக நிலைமைகளை நாம் கட்டுபடுத்தியுள்ளோம். இழப்புகளை கட்டுப்படுத்தியுள்ளோம். எனினும் சொத்து சேதங்கள் இடம்பெற்றுள்ளன.
அதற்கான நட்டஈடு வழங்கவுள்ளோம். இந்த நிலைமைகளில் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். எனினும் நாம் இதனை கட்டுபடுத்தாது அல்லது அதியுச்ச அதிகாரங்களை பயன்படுத்தியிருந்தால் இழப்புகள் அதிகமாக இருந்திருக்கும். அவ்வாறான நிலைமையில் நாட்டில் மேலும் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கும். மத அமைப்புகள் என்ற பெயரில் இனவாதத்தை தூண்டும் நபர்கள், குழுக்கள் அனைத்துமே தடை செய்யப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த நாட்டில் இனவாதக் கலவரங்கள் இடம்பெற்ற சிங்கள பௌத்த இனவாதமே காரணமாகும். தமிழர்கள் நெருக்கடியை சந்திக்கவும் இதுவே காரணமாகும், ஆகவே முதலில் சிங்கள பௌத்த இனவாதத்தை கட்டுபடுத்த வேண்டும்.
அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து கொண்டுசெல்வதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. நாட்டில் பிரச்சினைகள் நிலவிய நிலைமையில் தான் அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டு நிலைமைகள் கட்டுபடுத்தப்பட்டன. ஆனால் தொடர்ந்தும் நாம் அவசரகால சட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லை. இன்றும் நாட்டில் சில குழப்பங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆகவே வெகு விரைவில் நிலைமைகளை சரிசெய்துவிட்டு அவசரகால சட்டத்தைக் நீக்குவோம். அதற்கு உரிய அமைச்சராக நான் வாக்குறுதி வழங்குகின்றேன். இப்போதும் நாட்டின் நிலைமைகள் குறித்து பாதுகாப்பு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். விரைவில் நிலைமைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவசரகால சட்டமும் நீக்கப்படும். அதேபோல் முகப்புத்தகம், உள்ளிட்ட தற்போது தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைப்பதிவு தளங்கள் வெகு விரைவில் வழமைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
