ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 30 இன் கீழ் 1 மற்றும் 34ல் கீழ் 1 ஆகிய இரண்டு பிரேரணைகளின் பரிந்துரைகளும் முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான பூகோள பருவகால மீளாய்வு அறிக்கை நேற்றையதினம் 37வது மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதன்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரித்தானியாவின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு, இந்த பிரேரணைகளின் பரிந்துரைகளையும், அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிகளையும் அமுலாக்க வேண்டியது அவசியமானது. இதேவேளை, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய அமெரிக்கா, இந்த விடயம் கவலையைத் தருவதாகவும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் மாநாட்டில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அமெரிக்காவின் பிரதி இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன்நிறுத்தும் பொறுப்பினை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் 30ன் கீழ் 1 மற்றும் 34ல் கீழ் 1 ஆகிய பிரேரணைகளை அமுலாக்குவதற்கு அரசாங்கம் மேலும் ஒருபடி அதிக சிரத்தை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகள் பேரவையின் 37வது அமெர்வில் நேற்றையதினம் இலங்கை தொடர்பான பூகோள மீளாய்வு அறிக்கை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பூகோள காலக்கிரம மீளாய்வு அறிக்கை என்பது, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 193 நாடுகளிலும் நிலவும் மனித உரிமைகள் மட்டம் குறித்த ஆய்வு அறிக்கையும். இதுவரையில் 3 சுற்று ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இதில் 3ம் சுற்றில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, கடந்த வருடம் நொவம்பர் மாதம் இடம்பெற்ற பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. குறித்த அறிக்கையின் பெறுபேறுகள் நேற்று முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த அறிக்கையின்படி இலங்கைக்கு மொத்தமாக 230 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் 12 சுயாதீன அங்கீகாரத்துடன், 177 பரிந்துரைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.