கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன்படி இவர்களுக்கு குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தில் நாட்டின் வௌ;வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.இதேவேளை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் திருகோணமலை நகரத்தில் இரண்டு பேர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்த சந்தேகநபர் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை கண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சியில் நேற்று மாலை 6 மணி அளவில் சந்தேகத்தின் பெயரில் 6 பேர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வியாபார நிலையங்கள் நடாத்திவரும் 4 பேரும், கிளிநொச்சி ஏ9 வீதியில் தும்பினி விகாரைக்கு அருகில் ஒருவரும், கனகாம்பிகைகுளம் பிரதேசத்தை சேர்ந்து ஒருவரும் என 6 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு சில முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுவதாக தெரிவித்தே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றும், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் காலி, கராப்பிட்டிய சிறிபுர வீதி பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் அக்மீமன பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் இரண்டு சிம்கார்ட் மற்றும் கைத்தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் காலி – பொத்தல காவற்துறை நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை அதிரடி படையினர் இன்று காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ். பருத்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகலை தொடக்கம் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இன்று அதிகலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதும் சுற்றிவளைப்பு தொடர்ந்து கொண்டிருப்பதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சகல வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டிடங்கள் என அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இந்த சுற்றிவளைப்பில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முஸ்லிம் என கூறப்படுகின்றது.

அம்பாறை நிந்தாவூர் பிரதேசத்தில் தற்கொலைதாரிகள் இருப்பதாக கிடைத்த தகவலின்படி வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் அங்கிகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இன்று நடத்தப்பட்ட சோதனையின் போது சிறிய தகடுகள், மேலும் சில பொருட்களும்,பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.

இது இவ்விதமிருக்க மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றில் இருந்து கத்தி மற்றும் வாள்கள் 47 உடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா நகரில் பொலிஸாரும் இரானுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போது குறித்த பள்ளிவாசலில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளன. குறித்த பள்ளிவாசலில் உள்ள களஞ்சியசாலையிலயே குறித்த வாள்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த வாள்கள் பள்ளியில் வைக்கபட்டது என பொலிஸார் குறித்த சந்தேகநபரிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த வாள்கள்பள்ளிவாசலுக்கு எவ்வாறு வந்தது என தெரியாது என சந்தேக நபர் மஸ்கெலியா பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுப்பு காவலில் தடுத்து வைத்து மஸ்கெலியா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், திருகோணமலை – இறக்கக்கண்டி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என, கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவற்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து, மோட்டார் சைக்கிளொன்றும் ஒவ்வொன்றும் 130 கிலோகிராம் எடையுடைய, வெடிகுண்டு குச்சிகள் 51, 27 அடியைக் கொண்ட பாதுகாப்புக் கம்பிகள், 215 டெட்டோனேட்டர்கள் என்பவை மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.