ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தமிழகத்தின் இரு இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு, விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சஹாரான் ஹசீமுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.இந்திய பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்ட விசேட பிடியாணைக்கு அமைய தஞ்சாவூர் மாவட்டத்தின் திருச்சிராப்பள்ளி நகரில் இரண்டு இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டு மடிக்கணனிகள், 6 கையடக்க தொலைப்பேசிகள், 11 சிம் அட்டைகள், 5 டீ.வி.டீகள், பெரும்பாலான கணினி தகவல்களை சேமித்து வைக்கும் உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் தமிழகத்தின் 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போதும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.