இலங்கையின் 22ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம்-

ranil wickramaசுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற விசேட நிகழ்வில் சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். உலக அரசியல் வரலாற்றில் நான்காவது முறை பிரதமர் பதவி வகிக்கும் இரண்டாவது அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். இதற்கு முன்னர் பிரித்தானியாவின் வில்லியம் எவர்ட் க்லெஸ்டன் நான்கு தடவைகள் பிரதமராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வரலாற்றில் பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற பெருமைக்குரியவர் என்ற வகையில் நடந்து முடிந்த தேர்தலில் 5,00,566 விருப்பு வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார். பொதுத் தேர்தலில் 50,98,927 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் திகழும் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் நல்லாட்சியைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைக்க ஐ.தே.கட்சி சுதந்திரக் கட்சி உடன்படிக்கை-

UNP PAசமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் அதே நிகழ்வில் ஐதேக பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். அலரிமாளிகையில் ஊடகங்களிடம் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, சமரச தேசிய அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்தார். அதன்பின் நேற்று கூடிய சிறீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கம் அமைக்க இணக்கம் தெரிவித்த நிலையில் இன்று அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரதமர் பதவியேற்பு மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.

சபாநாயகராக கரு ஜயசூரியவின் பெயர் முன்மொழிவு-

karu jeyasuriyaபுதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரிய முன்மொழியப்பட்டுள்ளார். எதிர்வரும் 1ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவரது பெயர் அறிவிக்கப்படவுள்ளது. சபாநாயகரின் நியமனத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்குமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஐ.தே.கவின் தேசியப் பட்டியிலில் முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் புதிய நாடாளுமன்றத்தின் முதல் உறுப்பினராக கரு ஜெயசூரிய பதவியேற்கவுள்ளமை இங்கு குறிப்படத்தக்கது.