P1420023தமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராட்டத்தை நிறுத்துவோமென கடந்த 31.01.2017 தொடங்கி இன்றுடன் 17ஆவது நாளாக தங்கள் 84 குடியிருப்புக் காணிகளுக்காக சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவருமாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாப்புலவு மக்களை இன்றுகாலை புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் போராட்டம் நடாத்திவரும் இடத்திற்கு நேரில் சென்று அவர்களது போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், எங்களின் காணிகளை விடுவிப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் எம்.சுவாமிநாதன் அவர்கள் அரசாங்க அதிபரின் ஊடாக ஒரு அறிவித்தலை கொடுத்திருந்தாலும், அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் எங்கள் காணிக்குள் கால் பதிக்கும்வரையில் போராடுவோம் என்று கூறினார்கள்.
இங்கு கருத்துத் தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், 84 குடியிருப்புக் காணிகளுக்காக நீங்கள் நடாத்திவருகின்ற இந்தப் போராட்டத்திற்கு நாங்கள் பூரண ஆதரவைத் தருகின்றோம் என்று வாக்குறுதியளித்ததோடு, நிச்சயமாக நீங்கள் உங்களுடைய பிரதேசத்திற்குச் செல்லும்வரையிலும் போராட்டத்தை நடாத்துவதற்கு நாம் பூரண ஆதரவினை வழங்குகின்றோம் என்று கூறினார்.

தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேலும் கூறுகையில், கிட்டத்தட்ட 84பேரின் குடியிருப்புக் காணிகளிலே 54பேருக்கான ஆவணங்கள் அவர்களிடம் உள்ளன. மிகுதியாகவுள்ள காணிகளுக்கான ஆவணங்கள் அவர்களிடம் தற்போது இல்லாதபோதிலும், அவர்கள் அங்கு குடியிருந்ததற்கான ஆதாரங்கள் பலவுள்ளன. ஆகவே, இந்த 84பேரின் குடியிப்புக் காணிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

அது மாத்திரமல்ல பூர்வீகக் குடிகளாக இருந்த ஏனைய பிரதேசங்கள்கூட இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளன. அவையும் மிக விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். இவை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் என சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நாம் ஏற்கனவே கதைத்துள்ளதுடன், அரசியல் ரீதியான அழுத்தங்களையும் நாங்கள் தொடர்ந்து கொடுப்போம் என்று தெரிவித்தார்.

அவ்வாறு காணிகள் விடுபடாமல் போனால் அதற்கெதிரான வெகுஜனப் போராட்டங்கள் நடைபெறுமிடத்து அவற்றிற்கான பூரண ஆதரவினை வழங்குவோம் என்றார்.

P1420024 P1420028 P1420035 P1420036 P1420044P1420019 P1420048 P1420049 P1420050 P1420052 P1420063