saththurukondan massacre1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தினையே உலுக்கிய சம்பவமான சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் நேற்று மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனியச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சுற்றுவிளைப்பின்போது சிறுவர்கள் முதியவர்கள் பெண்கள் என 188க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். இந்நிலையில் அனைவரும் சத்துருக்கொண்டான் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக அதில் இருந்து தப்பிவந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அது படுகொலையாக கருதப்பட்டு வருடாந்தம் அனுஸ்டிக்கப்படுகின்றது. நேற்று மாலை சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் கொக்குவில் பொதுச்சந்தைக்கு முன்பாக இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி பனிச்சையடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அருகில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வின்போது முதன்முறையாக உயிரிழந்த 188பேரின் பெயர்களும் வைக்கப்பட்டு அவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து உயிரிழந்த உறவுகள், அரசியல்வாதிகளினால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் மதத்தலைவர்களினால் மத அனுஸ்டானங்களும் செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் நினைவாக மௌன அஞ்லி செலுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.