இந்­திய இரா­ணு­வத்தின் ஓய்வுநிலை புல­னாய்வு நிபு­ணரும் தெற்­கா­சி­யாவில் பயங்­க­ர­வாதம் மற்றும் கிளர்ச்­சி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் நீண்ட அனு­பவம் வாய்ந்த வர்­களுள் ஒரு­வரும் எழுத்­தா­ள­ரு­மான கேர்ணல் ஆர்.ஹரி­க­ரனை சென்­னையில் உள்ள அவ­ரு­டைய இல்­லத்தில் சந்­தித்­த­போது,

இலங்கை தீவில் காணப்­ப­டு­கின்ற வல்­லா­திக்க நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டிகள், பூகோள அர­சியல் நிலை­மைகள், இந்­திய அமை­திப்­ப­டையின் செயற்­பா­டுகள்,இலங்கை தேசிய இனப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் அவர் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வியின் முழு­வடிவம் வரு­மாறு; கேள்வி:- சம­கா­லத்தில் இலங்கை, இந்­தியா,சீனா ஆகிய நாடு­க­ளுக்கிடை­யே­ காணப்படும் உற­வு­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- இந்­தியா, இலங்கை, சீனா ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களை தனித்­த­னி­யாக பார்க்க முடி­யாது. மூன்று நாடு­க­ளுக்கும் இடையில் முக்­கோண உற­வு­களே காணப்­ப­டு­கின்­றன.

உலக நாடுகள் அமெ­ரிக்­கா­வுடன் கூட்­டி­ணைந்து உலக ஒழுங்கு முறையில் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றன.அவ்­வா­றான நிலையில் சீனா தனது இரா­ணுவ மற்றும் பண பலத்­தினை உப­யோ­கித்து அந்த உலக ஒழுங்­கு­மு­றையை மாற்­றி­ய­மைக்க முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றது.

இதற்கு சிறந்­த­வொரு உதா­ர­ணமே பிறிக்ஸ் அமைப்­பாகும். சீனாவின் முன்­னெ­டுப்பில் ரஷ்யா, பிரேசில், இந்­தியா, தென்­னா­பி­ரிக்கா ஆகிய நாடுகள் அதே குறிக்­கோ­ளுடன் ஒத்­து­ழைக்­கி­றார்கள். இருந்­தாலும் இந்த நாடு­க­ளி­டத்தில் உல­க­ளவில் முடி­வு­களை எடுப்­ப­தற்கு அதா­வது தீர்­மா­னிக்­கின்ற சக்தி இன்­னமும் போதி­ய­ள­விலில்லை.

ஆகவே இத்­த­கைய அமைப்பு உரு­வாகி இருப்­பினும் இந்த அமைப்­பி­லுள்ள நாடு­க­ளி­டத்­திலும் யார் முன்­னிலை பெறு­வது என்ற போட்­டித்­தன்மை உள்­ளது. ரஷ்­யாவைப் பொறுத்­த­வ­ரையில் அதற்கு அமெ­ரிக்­கா­வுடன் தான் பிரச்­சினை. ஆகவே சீனா,இந்­தி­யாவை கடந்து இந்த அமைப்­பிற்கு தலை­மை தாங்க வேண்டும் என்று கரு­துகின்­றது.

இந்த நிலை­மையில் தான் தெற்­கா­சிய பிராந்­தி­யத்தில் சீனாவின் பிர­சன்­னத்­தினை கவ­னத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் தெற்­கா­சிய பிர­வே­சத்தின் ஒரு பாகம் தான் இலங்­கையில் சீனாவின் தோற்றம்.

இலங்கையும், இந்­தி­யாவும் தொப்­புள்­கொடி உற­வையும் கடந்து, பூகோள ரீதி­யாக ஒட்­டிப்­பி­றந்த இரட்டைக் குழந்­தைகள் போன்­றன. இவற்றில் எந்­த­வொன்­றுக்­கா­வது பாது­காப்பு விளை­வுகள் ஏற்­பட்டால் அது நிச்­ச­ய­மாக மற்­றொன்றில் எதி­ரொ­லிக்கும். ஆகவே அதில் இந்­தியா கவ­ன­மாக இருக்கும். இந்­தியா மிகப்­பெரும் ஜன­நா­யக நாடு. சீனாவைப் போன்று தன்னிச்­சை­யாக முடி­வு­களை எடுக்­க­மு­டி­யாது. இந்து சமுத்­திரப் பிராந்­தி­யத்தில் சீனாவின் பிர­சன்­னத்­துக்­கான சம­நி­லையை இந்­தியா நிச்­ச­ய­மாக கவ­ன­மாக பேணும்.

கேள்வி:- இலங்­கையில் சீனாவின் ஆதிக்கம் அதி­க­ரித்துச் செல்­கின்­றதாக கணிக்­கப்­ப­டு­கின்ற நிலையில் அந்த நிலைமை எதிர்­கா­லத்தில் இந்­திய பிராந்­தி­யத்தின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாகி விடு­மெனக் கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- இந்­து ­ச­முத்­தி­ரப்­ பி­ராந்­தி­யத்தில் இந்­தி­யாவே வலி­மை­யான கடற்­ப­டையைக் கொண்ட நாடாகும். இந்­தியா 50 வரு­டங்­க­ளுக்கு அதி­க­மாக விமானம் தாங்கி கப்­பலை இயக்கி வரு­கின்­றது. ஆனால் சீனா தற்­போது தான் விமானம் தாங்கி கப்­ப­லையே கட்­டு­கின்­றது. ஆகவே யுத்தம் ஒன்று நிக­ழும்­போது
அந்தக் கப்­பலை இயக்­கு­வ­தென்றால் ஆகக்­கு­றைந்­தது பத்து வருட அனு­ப­வ­மா­வது அவ­சி­ய­மாகும். ஆனால் சீனாவைப் பொறுத்­த­வ­ரையில் தன்னை அண்­மித்­துள்ள கடற்­பி­ராந்­தி­யத்தில் தனது பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­த வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்குள் உள்­ளது.

உலகளவில் அமெ­ரிக்­காவின் கடற்­படை

வலிமை வாய்ந்­தது. அமெ­ரிக்­காவின் தோழமை நாடு­க­ளான ஜப்பான் மற்றும் தென்­கொ­ரி­யாவின் உத­வி­யுடன் தென்­சீனக் கடல் ஊடாக அமெ­ரிக்க கடற்­படை பிர­வே­சிக்­கலாம் என்ற அச்சம் சீனா­வுக்கு உள்­ளது. ஆகவே அந்த நாடு­க­ளி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் பிர­வே­சத்­தினை அகற்ற வேண்டும் என்று சீனா கரு­து­கின்­றதே தவிர தாக்­குதல் தொடுக்க வேண்டும் என்று முனைப்பு காட்­ட­வில்லை.

இவ்­வா­றான சூழ்­நி­லை­யில்தான் இந்து சமுத்­திரப் பெருங்­க­டலில் அம்­பாந்­தோட்­டையில் சீனா காலடி பதித்­துள்­ளது. இந்த துறை­மு­கத்­தினை சீனா இரா­ணு­வத்­த­ள­மாக்­குமா? அல்­லது சாதா­ரண கடல் வணிக தள­மா­கவே வைத்­துக்­கொள்­ளுமா என்று தற்­போது விவா­திப்­பதில் பய­னில்லை. சீனா­வுக்கு அவ­சியம் ஏற்­பட்டால் அம்­பாந்­தோட்­டையை இரா­ணு­வத்­த­ள­மா­கவோ அல்­லது கடற்­படை தள­மா­கவோ உப­யோ­கிக்கும். இலங்கை அர­சாங்கம் சீனா­வுடன் இதற்­கான புரிந்­து­ணர்வு காணப்­ப­டு­வ­தாக கூறு­கின்­றது. ஆனால் சீனா­வுக்கு அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தினை பயன்­ப­டுத்­த­வேண்­டிய சூழல் வரு­மாயின் யாரு­டைய அனு­ம­தி­யையும் சீனா கோரப்­போ­வ­தில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­டத்தில் சீனா­வுக்கு அம்­பாந்­தோட்டை துறை­முக கட்­டு­மா­னத்­தினை வழங்­கி­யது தொடர்பில் ஒரு முறை கேள்வி எழுப்­பினேன். அதன்­போது, இந்­தி­யா­வுக்­கு முதலில் அம்­பாந்­தோட்டை துறை­முக நிர்­மாணம் குறித்த திட்­ட­வ­ரைவு அனுப்பி வைக்­கப்­பட்ட போதும் ஒரு­வ­ரு­டங்­க­ளாக பதில் கிடைக்­கா­ததன் கார­ண­மா­கவே சீனா­வுக்கு வழங்­கப்­பட்­ட­தாக என்­னி­டத்தில் கூறினார். அதன் பின்னர் மத்­திய அர­சாங்­கத்­திடம் தொடர்பு கொண்­ட­போது, பொருளா­தார ரீதி­யாக நன்­மைகள், இலா­பங்கள் குறை­வாக உள்­ளதன் கார­ண­மாக அத்­திட்டம் தொடர்பில் கரி­சனை கொண்­டி­ருக்­க­வில்லை என்று குறிப்­பிட்­டார்கள்.

அதே­நேரம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ சீனா­வுடன் நெருக்­க­மாக இரு­க்கின்ற விடயம் குறித்தும் நான் உரை­யா­டிய போது, இந்­தியா சகோ­தர நாடு, சீனா நட்பு நாடு என்று பதி­ல­ளித்தார். யுத்­தத்தின் பின்னர் அவ­ரு­டைய அர­சியல் நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுப்­ப­தற்கு நிதி அவ­சி­ய­மாக இருந்­ததால் தான் அவர் சீனா­வுடன் நெருக்­க­மாக இருந்தார். அதன் ஊடாக நிதியைப் பெற்று யாரும் செய்­யாத அபி­வி­ருத்­தி­களை செய்­த­தாக காட்ட முற்­பட்டார்.

தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை முன்பு
ஒரு முறை சந்­திக்க நேர்ந்­த­போது, அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தினை சீனா­வுக்கு முழு­மை­யாக வழங்கும் திட்டம் குறித்து உரை­யா­டினேன். அதன்­போது அவர், அம்­பாந்­தோட்­டையில் சீனாவின் பிர­வேசம் உள்­ளது என்று ஏன் அச்சம் கொள்­கின்­றீர்கள். இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் பாலம் நிர்­மா­ணிக்­கப்­பட் டால் நான்கு மணி நேரத்தில் இந்­தியப் படைகள் அம்­பாந்­தோட்­டைக்கே சென்­று­வி­டலாம் அல்­லவா? இதனை ஏன் ஜெய­ல­லிதா (மறைந்த முதல்வர்) ஆத­ரிக்­கின்றார் இல்லை? என்று கூறினார். அதுதான் யதார்த்­த­மாகும்.
உதா­ர­ண­மாக, ஒரு­காலத்தில் மாலை­தீவில் ஆட்­சி­மாற்­றத்திற்­காக ஈழப்­போ­ராட்ட அமைப்­பான புளொட்­டுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. அதன்­போது அறு­பது புளொட் போரா­ளிகள் மாலை­தீ­வுக்கு சென்­றி­ருந்தார்கள். அந்த தகவல் இந்­தி­யா­வுக்கு கிடைத்­த­வுடன் உட­ன­டி­யாக சுற்­றி­வ­ளைக்­கப்­பட்டு அந்த முயற்சி தடுத்து நிறுத்­தப்­பட்­டது.

அண்­மையில் கூட மாலை­தீவில் நெருக்­க­டிகள் ஏற்­பட்­ட­போது இந்­தி­யா­வினால் அத்­த­கை­ய­தொரு முடி­வு­களை எடுத்­தி­ருக்க முடியும். ஆனால் இந்­தியா அதனைச் செய்­யாது. காரணம், உலக ஒழுங்கு மாற்­ற­ம­டைந்து விட்­டது. இந்­தி­யா­வுக்கும் சீனா­வுடன் நல்­லு­றவை பேண­வேண்­டி­யுள்­ளது. அதே­போன்று சீனா­வுக்கும் இந்­தி­யா­வுடன் நல்­லு­றவை பேண­வேண்­டி­யுள்­ளது.

இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் இடையே பிரச்­சி­னைகள் தொடர்ந்து காணப்­பட்­டுக்­கொண்­டுதான் இருக் கும். ஆனாலும், கடந்த ஆண்டு சீனா­விற்­கான இந்­திய ஏற்­று­ம­தி­யா­னது 41சத­வீ­த­மாக முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது. இரு நாடு­க­ளுக்கும் சந்­தைப்­ப­டுத்­த­லுக்­கான வாய்ப்­பினை அதிகரிக்க வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. அதே­நேரம் இலங்­கை­யினைப் பொறுத்­த­வ­ரையில் முத­லீ­டு­களைச் செய்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. சந்­தைப்­ப­டுத்தல் வச­தி­களும் உள்­ளன. ஆகவே தான் சீனாவும், இந்­தி­யாவும் இலங்­கையில் கரி­சனை கொண்­டி­ருக்­கின்­றன.

அவ்­வா­றான நிலையில் இந்­தியா, சீனாவுக்கு இடையே பலப்­ப­ரீட்சை நடந்து கொண்­டே­யி­ருக்கும். ஆனாலும் இரு நாடு­களின் தலை­வர்­களும் இந்த விட­யத்­தினை நன்கு அறி­வார்கள்.அதனால் தான் பிர­தமர் நரேந்­திர மோடி யும் சரி, சீன ஜனா­தி­பதி ஷீ ஜின் பிங்கும் சரி இவ்­வா­றான விட­யங்­களை பற்றி அதி­க­மாக பகி­ரங்க கருத்துக்­களை தெரி­விக்க மாட்­டார்கள். இத­னையும் கவ­னத்தில் கொள்ள வேண் டும்.

கேள்வி:- இலங்கைத் தீவில் காணப்­படும் அமெரிக்கா, சீனா, இந்­தியா ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான போட்­டிச்­சூழலை இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு கை யாள வேண்டும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- தனது மண்ணின் மீது நடை­பெ­று­கின்ற பலப்­ப­ரீட்­சையை இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்கள் அறி­யா­ம­லில்லை. யார் ஆட்­சிக்கு வந்­தாலும் அந்தச் சூழலை புரிந்து கொள்­வார்கள்.

சற்று பின்­னோக்கி பார்த்தால், சீனா­வுக்கு ஆத­ர­வான ஜனா­தி­பதி என்று சொல்­லப்­பட்ட மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் சீன நீர்­மூழ்கி கப்பல் இலங்­கைக்கு வந்­தி­ருந்­தது. அதற்­கான எதிர்ப்­பினை இந்­தியா பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தது. அச்­ச­ம­யத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ டில்­லிக்குச் சென்று விளக்­க­ம­ளித்தார். ஆக, இலங்­கையின் எந்த ஆட்­சி­யா­ளர்­களும் நிலை­மை­களை புரிந்­து­கொள்­வார்கள். அதி­லி­ருந்து அவர்­களால் விடு­ப­ட­மு­டி­யாது.

சீனாவும் இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டு­களை முழு­மை­யாக தன்னைச் சார்ந்து மாற்­று­வ­தற்கு விரும்­பாது. அவ்­வாறு மாற்ற முற்­பட்டால் இந்­தி­யாவின் பகைமை அதி­க­மா­கி­விடும் என்ற அச்சம் சீனா­வுக்கு உள்­ளது. இதனை விடவும் மற்­று­மொரு விட­யமும் உள்­ளது.

இந்­தியப் பெருங்­க­டலில் புதி­ய­தொரு பாது­காப்பு சூழல் உரு­வா­கின்­றது. அதா­வது, இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நான்கு நாடு­களின் கடற்­ப­டைகள் ஒருங்­கி­ணைந்து செயற்­ப­டு­வது எப்­படி என்­பது பற்றி ஆலோ­சிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த ஆலோ­ச­னையை மேலும் செயற்­ப­டுத்த அதி­க­மாக அமெ­ரிக்கா விரும்­பி­னாலும் சீனாவை எதற்கு வீணாக சீண்ட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இந்­தி­யா­வுக்கு சற்றுத் தயக்கம் உள்­ளது.

அதே­நேரம் இந்­தி­யா­வுக்கும், அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான பாது­காப்பு ஒப்­பந்­தங்­களை கவ­னத்தில் கொள்­கின்­ற­போது, இந்­தி­யா­விடம் குறை­பா­டாக உள்ள விட­யங்­களை சீர் செய்­வ­தா­கவே உள்­ளன. அத்­துடன் சீனா­வுடன் இந்­தி­யா­வுக்கு போர் மூண்டால் அதற்கு தேவை­யான விமா­னங்­க­ளையும், ஆயு­தங்­க­ளையும் அமெ­ரிக்கா வழங்கும்.

இது­வொ­ரு­வி­ட­ய­மாக இருக்­கையில், இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தின் மேற்­குப்­ப­கு­தியில் பிரான்ஸ் நாட்டின் ஈடு­பாடு அதி­க­மாக உள்­ளது. அங்கு அதன் வலி­மை­யான கடற்­படை உள்­ள­தோடு இரண்டு தளங்கள் உள்­ளன. பிரான்ஸ் ஜனா­தி­ப­தியின் இந்­திய விஜ­யத்தின் பின்னர் அந்த தளங்­களை இந்­தியா உப­யோ­கிப்­ப­தற்­கான ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தா­கி­யுள்­ளன. அதே­போன்று பிரான்ஸ் கடற்­ப­டையும் இந்­திய கடற்­படை தளங்­களை உப­யோ­கிக்க முடியும்.

இதே­போன்று இந்­தியப் பெருங்­க­ட­லி­லிருந்து வளை­குடா பிரியும் பகு­தியில் ஆபி­ரிக்­காவின் நுழை­வா­யி­லாக ஜிபுட்டி என்ற பகுதி காணப்­ப­டு­கின்­றது. அங்கு சீனா தளம் அமைத்­துள்­ளது. அமெ­ரிக்கா, ஜப்பான் ஆகிய நாடு­க­ளுக்கு ஏற்­க­னவே அங்கு முகாம்கள் உள்­ளன. பிரான்­ஸ{க்கு அங்கு கடற்­ப­டைத்­தளம் உள்­ளது. அவ்­வா­றான நிலையில் இந்­தியா தற்­போது பிரான்ஸின் கடற்­ப­டைத்­த­ளத்­தினை பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஒப்­பந்தம் செய்­துள்­ளது.

இதே­போன்று சீனா, பாகிஸ்­தானின் குவாதர் துறை­மு­கத்தில் கடற்­ப­டைத்­த­ளத்­தினை அமைக்­கின்­றது. இதனை ஈடு­செய்­வ­தற்கு இந்­தியா ஈரா­னுடன் ஒப்­பந்தம் செய்து 60கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள சாபஹார் துறை­மு­கத்­தினை பலப்­ப­டுத்தும் அனு­ம­தியைப் பெற்­றுள்­ளது.

இந்த நிலை­மை­க­ளை­யெல்லாம் இலங்கை ஆட்­சி­யா­ளர்கள் அறி­யா­ம­லில்லை. அதே­நே­ரத்தில் அமெ­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் நெருக்­க­மான உற­வுகள் உள்­ளன. இரா­ணுவம், பாது­காப்பு உட்­பட பல விட­யங்­களில் அத்­த­கைய நெருக்கம் காணப்­ப­டு­கி­றது. ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உத­வி­களை இலங்கை பெறு­வதன் கார­ணத்­தாலும் இவ்­வா­றான நெருக்­க­மான உற­வுகள் காணப்­ப­டு­கின்­றன.

ஆனால் தெற்­கா­சிய வல­யத்தில் மிக முக்­கி­ய­மாக பாகிஸ்­தானில் ஆட்சி மாற்றம் நிக­ழ­வேண்டும். தற்­போதைய சூழலில் இரா­ணு­வத்தின் ஆதிக்கம் மறை­முக ஆட்­சியில் இருப்­பதால் அந்த சூழல் சீனா­வுக்கு வாய்ப்­பாக உள்­ளது. காரணம் சீனாவின் இரா­ணுவம் நேர­டி­யாக பாகிஸ்தான் இரா­ணு­வத்­தினை கையாள்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. ஆகவே அங்கு மாற்றம் நிகழ வேண்டும்.

மேலும் சீனா­விடம் காணப்­ப­டு­கின்ற மிகப்­பெரும் பல­மான பண­ப­லத்­திற்­கான சம­நி­லைத்­தன்­மையும் உரு­வாக வேண்­டி­ய­தா­கின்­றது. இந்­நி­லையில் ஆபி­ரிக்க தலை­வர்­களைப் போல் அல்­லாது இலங்கை தலை­வர்­க­ளுக்கு இந்த நிலை­மை­களை எவ்­வாறு கையாள முடியும் என்­பதை நன்கு அறிந்­தி­ருப்­பார்கள் என நம்­பு­கிறேன். இந்த பலப்­ப­ரீட்சை நிறை­வ­டை­யாது தொடர்ந்து கொண்­டி­ருந்­தாலும் இலங்கை ஆட்­சி­யா­ளர்கள் சரி­யான நேரத்தில் சரி­யான முடி­வு­களை எடுப்­பார்கள் என்ற நம்­பிக்கை உள்­ளது. (ஆர்.ராம் )