Header image alt text

வட மாகாணசபை உறுப்பினர் (புளொட் தலைவர்) தர்மலிங்கம் சித்தார்த்தன் மக்கள் சந்திப்பு மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு உதவி-

வடக்கு புன்னாலைக்கட்டுவன் சுதந்திரபுரம்

p4யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்திற்கு இன்றுமாலை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் (புளொட் தலைவர்) திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வடக்கு புன்னாலைக்கட்டுவன் சுதந்திரபுரம் பாரதி சனசமூக நிலையத்தில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். சனசமூகநிலைய தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் Read more

இலங்கையின் முன்னேற்றம்; குறித்து அமெரிக்கா மதிப்பீடு-

Pisvalஇலங்கைமீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கிலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை வரவுள்ள நிஷா தேசாய், அரச மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுடன் பேசவுள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்க அனுசரணையில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டுவந்த தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடனும் நிஷா தேசாய் பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.

யுத்த பாதிப்புகள் குறித்து கூட்டமைப்பு தனியான கணிப்பீடு-

dயுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் தனிப்பட்ட கணிப்பீடு ஒன்றை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. விரைவில் வடமாகாண சபையின் ஊடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பிலும் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பிலும் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு கணிப்பீடுகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் இந்த கணிப்பீட்டில் நம்பிக்கை இல்லை. போலியான தகவல்களை மேற்கொண்டு சர்வதேசத்திடம் சமர்ப்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்நிலையில் உண்மையான தகவல்களை அறிந்து கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்த ஆய்வினை மேற்கொள்ளவிருக்கிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்திய ஊடகவியலாளரிடம் புலனாய்வினர் விசாரணை-

tamil_prabakaran_CInocreditஇலங்கையின் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரனை புலனாய்வுப்பிரிவினர் விசாரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகள் முடிந்ததும் அவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பிரபாகரன் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தாலும், அவரிடம் கைப்பற்றிய கேமராவை ஆராய்ந்தபோது, அதில் அவர் இராணுவ நிலைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து படம் பிடித்திருந்ததை கண்டோம். குறிப்பாக நாவற்குடா பகுதி இராணுவ முகாம், அப்பகுதியின் இராணுவ நடமாட்டங்கள், இராணுவ வாகன நடமாட்டங்களையெல்லாம் அவர் படம் பிடித்திருந்தார் என அஜித் ரோஹன குறிப்பிட்டார். ஒரு சுற்றுலா பயணியான இவர் எதற்காக இராணு இலக்குகள், இராணுவத்தினரை மட்டும் குறிவைத்து படம் பிடிக்கவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது கைது குறித்தும், இலங்கையில் இவரது நடத்தை தொடர்பிலும் இந்திய தூதரகத்திற்கு அறிவித்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.  மேலும் இவர் கைதுசெய்யப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ. சிறிதரனும் கூட இருந்துள்ளார் அவரிடம் விசாரித்த பொழுது இவர் தனது நண்பர்தான்  ஊடகவியலளர் என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார்.

சாவகச்சேரியில் ஆணின் சடலம் மீட்பு-

dead.bodyயாழ். சாவகச்சேரி தனங்கிளப்பு பிரதேசத்தில் ஏ32 வீதிக்கு அருகிலுள்ள வயலிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்றுமாலை 5மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. கோவிலாக்கண்டி மேற்கு, தச்சன்தோப்பைச் சேர்ந்த 48வயதான சோமசுந்தரம் குணரத்தினம் என்பவரே இவ்வாறு வயலிலுள்ள நீரில் தலை மூழ்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை விசாரணைகளை மேற்கொண்டார். விசாரணையையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இந்திய மீனவர் குறித்து ஜெயலலிதா கலந்துரையாடல்-

bஇலங்கை மற்றும் தமிழக மீனவ பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவது தொடர்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். தமிழக அரச செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது தமிழகத்தின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இந்த மாதம் இரண்டு நாடுகளின் மீனவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் இந்திய பிரதமருக்கு ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த பேச்சுவார்த்தைகளில் தமிழக அரசாங்கத்தை மத்தியஸ்தராக கருதப்பட வேண்டும் என அவர் தமது கடிதத்தில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சியில் இளைஞர் கடத்தல்-

cயாழ். வடமராட்சி வடக்கைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி வடக்கு இன்பரூட்டியைச் சேர்ந்த 23வயதான சூரியகுமரன் கலையமுதன் என்பவரே நேற்று அதிகாலை 4 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக கடத்தப்பட்டவரின் தந்தை, கந்தவனம் சூரியகுமாரன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இளைஞன் கடத்தப்படும் போது ‘தன்னை 4பேர் கொண்ட கும்பல் ஒன்று வானில் கடத்திச் செல்வதாக’ தனது தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பியதாக சூரியகுமாரன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தனது மகனைப் பற்றி புலனாய்வாளர்கள் ஊரில் விசாரித்துள்ள நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் புலனாய்வினருக்கு இதில் தொடர்பிருக்கலாமென தான் சந்தேகிப்பதாகவும் சூரியகுமாரன் மேலும் கூறியுள்ளார்.

வடக்கில் தமிழ் மொழியை புறக்கணிக்கும் பொலிஸார்-

LK policeவடக்கில் பொலிஸார் தொடர்ந்தும் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில பொலிஸ் நிலையங்களில் இன்னும் தமிழில் முறைப்பாடு செய்ய முடியாதநிலை காணப்படுகிறது. பொலிஸாரினால் அனுப்பப்படும் கடிதங்கள் கூடத் தனிச் சிங்களத்திலேயே உள்ளன என்று யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள் நேற்று பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின்போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், Read more

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் ஒன்பதாம் ஆண்டு நினைவுதினம்-

eசுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலையால் இலங்கையில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. Read more

உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத்திட்ட (பட்ஜெட்) தோல்விகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் பதவி இழக்க நேரிடும்: மாவைசேனதிராஜா

maaviஇலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்திலுள்ள சில உள்ளுராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டப் பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் மேலும் சில உள்ளுராட்சி சபைகளில் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், தமது கட்சி உறுப்பினர்களிடையே இணக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். Read more

 கிளிநொச்சியில் இந்திய ஊடகவியலாளர் கைது-

sசுற்றுலா விசாவில் வந்து படையினர் நிலைகொண்டுள்ள இடங்களை படம் பிடித்ததற்காக இந்தியர் ஒருவர் கிளிநொச்சி கிராஞ்சிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் வந்த தமிழகத்தைச் சேர்ந்த 24வயதான அவர் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடன் இடங்களை புகைப்படம் எடுத்த காரணத்தாலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டங்களை அந்நபர் மீறியுள்ளார். மேலதிக நடவடிக்கைக்காக அவரை குடிவரவு அதிகாரிகளிடம் பொலீசார் ஒப்படைப்பர் கைதானவர் தன்னை ஒரு ஊடகவியலாளர் என தெரிவிக்கவில்லை சுற்றுலா விசாவில் வருபவர்கள் இவ்வகையான நடவடிக்கையில் ஈடுபட முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சிறீதரன் அந்நபருடன் பயணித்துள்ளார் என பொலீஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் நேற்றையதினம் பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் விபத்துக்களால் 546 பேர் வைத்தியசாலையில் அனுமதி-

bநத்தார் தினத்திலும், அதற்கு முந்தைய தினத்திலும் திடீர் விபத்துகளுக்கு உள்ளான 546 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதி விபத்துகள் காரணமாக 114 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். வீதி விபத்துகள் மற்றும் துன்புறுத்தல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு அனர்த்தங்களுக்கு இலக்கான 85 பேர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் சம்பா அலுத்வீர கூறியுள்ள

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்-

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத, அதிகளவிலான இஸட் புள்ளிகளை பெற்றுள்ள மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் வழங்குவதற்கு உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் 180 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். இதற்காக மருத்துவ மற்றும் பல் மருத்துவம் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் விண்ணப்பிக்க முடியுமெனவும், இதற்கான விண்ணப்ப படிவங்களை உயர்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்த்தவ ஆலயத்துக்கு எதிர்ப்பு-

cமொனராகலை – வெல்லவாய பகுதியில் உள்ள ஆனைப்பள்ளம் பிரதேச மக்கள், கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சுதர்சனாராம விகாரை வளாகத்தில் இந்த தேவாலயம் நிர்மாணிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பௌத்த மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதியில் இவ்வாறு கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பகுதியில் ஒரே ஒரு இந்து குடும்பம் மாத்திரமே இருக்கின்றனர். ஏனையவர்கள் பௌத்தர்கள். இதனால் அங்கு கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்று அமைக்க வேண்டியதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எவ்வாறாயினும் உரிய அனுமதியுடனேயே இதனை நிர்மாணிப்பதாக இதனை நிர்மாணிக்கும் பாதிரியார் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சி தலைவரை தாக்கியர்கள் அடையாளம் காணப்பட்டனர்-

புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் கெலும் நிசாந்தவின் வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் கண்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் சேதமடைந்ததாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோவில் சென்ற 6பேர் கொண்ட குழுவினர் நேற்றிரவு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் கெலும் நிசாந்தவின் வீட்டின்மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர. இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலீசர் சந்தேகநபர்களை தாம் அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

பிள்ளையாரடி புத்தர் சிலை சேதம்-

1(3591)மட்டக்களப்பு பிள்ளையாரடியில் தனியார் காணியொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டு வீசப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தர் சிலை கீழே வீசப்பட்டுக் கிடப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்தே சேதமாக்கப்பட்ட சிலையின் பாகங்களை தாங்கள் மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையிலிருந்து சிலை வெளியே எடுத்து வீசப்பட்டதில் சிலை பல பாகங்களாக நொருங்கியுள்ளது. சிலையின் பாகங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளோம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். முற்றிலும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசமான பிள்ளையாரடியில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கு நிலைகொண்டு முகாமிட்டிருந்த படையினரும் பொலிஸாரும் குறித்த புத்தர் சிலையை அங்குள்ள தனியார் காணியொன்றில் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அனர்த்தங்கள் அறிவிக்க 117 தொலைபேசி இலக்கம் அறிமுகம்-

அனர்த்தங்கள் தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் 24 மணிநேரமும் இந்த இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஏறாவூரில் கடை உடைத்து பொருட்கள் கொள்ளை-

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றிலேயே நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த, 1,50,000 ரூபா பெறுமதியான மீள்நிரப்பு அட்டைகளும், 3,00,000 ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களும் 100,000 ரூபா பணம் ஆகியனவே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கடையின் கூரையை பிரித்து அதன் ஊடாக உள்நுழைந்த கொள்ளையர்கள், திருட்டை மேற்கொண்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். ஏறாவூர் பொலீசார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

லிஸ்பென் கடலில் வீழ்ந்து காணாமற்போன இலங்கையர்-

vபோர்த்துக்கல் லிஸ்பென் கடலில், இலங்கை கொடியை தாங்கிச்சென்ற கப்பலிலிருந்து பணியாளர் ஒருவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் நேரப்படி மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவரை கண்டுபிடித்து மீட்பதற்காக போர்த்துக்கல் ஹெலிகொப்டர்களும் கரையோர காவல் படையினரும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரும் இந்நபர் மீட்கப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடானிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர எற்பாடு-

qதெற்கு சூடானிலுள்ள 13 இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தெற்கு சூடான் மோதல் தற்போது உக்கிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர்கள் 13 பேரும் தற்போது உகண்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்கள் செயலகத்தில் விசேட கூட்டம்-

unnamed3சகல மாவட்டங்களின் பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையார்கள் கொழும்பில் கூடியுள்ளனர். தேர்தல்கள் அணையாளர் தலைமையில் இன்றுகாலை தேர்தல்கள் செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்த கூட்டத்தின்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வரவு – செலவுத் திட்டம் இரண்டாம்முறை தோற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்கள் தெரிவு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

65 ஆயிரம் போலி தேசிய அடையாள அட்டைகள்-

நாடு முழுவதிலும் 65 ஆயிரம் போலி தேசிய அடையாள அட்டைகள் உலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட அடையாள அட்டைகளில் பல போலியானவை. இவற்றில் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் பிழையானவை என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார். இதேவேளை, 2016ம் ஆண்டு முதல் நவீன இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது என ஆணையாளர் சரத் குமார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் மிகப் பெரிய மிதக்கும் புத்தகசாலை-

cஉலகில் மிகப் பெரிய மிதக்கும் புத்தகசாலை எனக் கூறப்படும் லோகோஸ் ஹோப் என்ற கப்பல் நாளைமுதல் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிவரை காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகசாலை 09 மாடிகளை கொண்டதுடன் 132 அடி நீளமானது. இதுவரை 164 நாடுகளில் 1,400 துறைமுகங்களில் இக்கப்பல் நங்கூரமிட்டுள்ளது. கப்பலில் 45 நாடுகளைச் சேர்ந்த 400 தொண்டர் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டர் அமைப்பின்கீழ் இக்கப்பல் செயற்பட்டு வருகிறது. மேற்படி கப்பலில் 5 ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலகம் உள்ளது. இக்கப்பலை பார்வையிட செல்வோரில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் 100 ரூபாவை கட்டணமாக அறவிடவும் லோகோஸ் ஹோப் கப்பலின் அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். கிழமை நாட்களில் காலை 10முதல் மாலை 4 மணிவரையும், சனிக்கிழமை காலை 10 முதல் இரவு 8 மணி வரையும், ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணி வரையும் கப்பலை பார்வையிடலாம்.

இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை-

gதென் சூடானில் வலுபெற்றுவரும் மோதல்களால் அங்கிருந்து உகாண்டாவை சென்றடைந்துள்ள 10 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தொழில் வழங்குனர்களின் செலவில் இவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம கூறியுள்ளார். இவர்களுக்குத் தேவையான வசதிகளை உகண்டாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச சட்டம்-

dசர்வதேச ரீதியாக தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்றுவது கடினமான செயல்திட்டம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதி பாலித்த கொஹன தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச் சபையின் ஆறாவது குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பும் அதுவாகும் எனவும், அந்த குழுவினால், தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச சட்டத்தை அமைக்கும் வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக அமைக்கப்படும் சர்வதேச சட்டம் தொடர்பில் உறுப்பு நாடுகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நியூயோக்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் உள்ள சிங்வா செய்திச் சேவையுடன் இடம்பெற்ற பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கைப் பொலீசார் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்-

fஇந்தியாவிலருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் வியாபாரம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதன்படி பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்தியாவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானிலிருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு போதைப் பொருள் வியாபாரம் செய்யும் நபர்கள் மூவர் கடந்த வாரம் சென்னையில் கைதாகியுள்ளனர்.

ஐ.தே.கட்சி எம்.பி தேவாரப்பெரும உள்ளிட்ட இருவர் உண்ணாவிரதம்-

eஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும மற்றும் வெல்லவாய பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் திலீப் பிட்டிகல ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதுரலிய வைத்தியசாலைக்கு முன்னால் இவர்கள் இன்றுபகல் தொடக்கம் உண்ணாவிரதம் இருந்து வருகிறன்றனர். மூடப்பட்டுள்ள பதுரலிய வைத்தியசாலையை திறக்குமாறு வலியுறுத்தியே மேற்படி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

முல்லைத்தீவு வெடிப்புச் சம்பவத்தில் சிறுவன் படுகாயம்-

முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் நேற்று மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் 6 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்தில், செல்வராசா சுதாகரன் என்ற சிறுவனே படுகாயமடைந்து, முள்ளியவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயிர்ச் செய்கைக்காக நிலத்தை உழுதும்போது, வித்தியாசமான பொருளொன்று வெளியில் தெரிந்துள்ளது. இதன்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அதனை எடுத்தபோது அது வெடித்துள்ளது. முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல்-

bகிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட செயலகத்தில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது. கிராம மட்டங்களில் உள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளைப் பெறுதல் தொடர்பாகவும் சிறுகுற்றங்கள் இடம்பெறும் இடங்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அதை தடுப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை தீர்க்கும் முகமாக நடமாடும் சேவைகளை நடத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரச உயரதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்-

நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றாது என கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வவுனியாவில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது, வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பு தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இதன்மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாதென்று கூறப்பட்டு அதில் பங்கேற்பதில்லையென தீர்மானிக்கப்பட்டது.

சாதனை படைத்த மாணவி பிரதா தெய்வேந்திரம்பிள்ளைக்கு பாராட்டு-

aகிளிநொச்சி மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடத்தைப் பெற்ற மாணவி பிரதா தெய்வேந்திரம்பிள்ளைக்கு இன்று பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய மாணவியான பிரதா தெய்வேந்திரம்பிள்ளை வர்த்தகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். கல்விக்கு பலவகையிலும் தடைகள் ஏற்பட்டிருந்த நிலையிலும், மனம் தளராது பல துன்பங்களுக்கு மத்தியில் இலட்சியக் கனவுகளோடு தவறவிட்ட படிப்புக்களை கற்றுமுடித்து கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியெய்தினார். பின்னர் இவர் தனது விடாமுயற்சியின் பயனாக உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்காக மாணவி பிரதாவைப் பாராட்டி, அவரின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இவருக்கு பாராட்டுச் சான்றிதழும், நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சிக் கிளையினர் இன்றுபிற்பகல் மாணவி பிரதாவின் இராமநாதபுரம் இல்லத்திற்குச் சென்று 5,000 ரூபாய் உதவித் தொகையையும், வாழ்த்துச் சான்றிதழையும் வழங்கியுள்ளனர். இதன்போது குறித்த மாணவியின் பாடசாலை ஆசிரியரும் உடனிருந்துள்ளார்.

மாகாண சபைகளை கலைக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது-

எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த தெற்கு மற்றும் மேல் மாகாணசபை தேர்தல்கள் மார்ச் 22 அல்லது 29ஆம் திகதிகளில் நடத்தப்படலாம் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இதற்கமைய தென் மற்றும் மேல் மாகாணசபைகள், எதிர்வரும் ஜனவரி 8, 11 அல்லது 12ஆம் திகதிகளில் கலைக்கப்படலாமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இம்மாதம் 28ஆம் திகதி மாகாண சபைகள் கலைக்கப்படவிருந்த நிலையில், நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவை ஒத்திவைக்கப்பட்டதாக தெரியவருகிறது. 2013ஆம் திகதிக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 31ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படும் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

தென் மாகாண சபை உறுப்பினர் இராஜினாமா-

தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் டி.டப்ளியு பிரதாபசிங்ஹ இராஜினாமா செய்துள்ளார். முன்னர் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியிருந்த அவர் இராஜினாமா செய்வதற்கான காரணத்தை அறிவிக்கவில்லை. மாகாண சபையில் இன்றையதினம் விசேட உரையொன்றை ஆற்;றியதன் பின்னரே அவர் இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு விசேட பொறுப்புகளை ஒப்படைத்துள்ளமையால் தான் இராஜினாமா செய்து கொள்வதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டியின் பணிப்பாளராக ரணவீர நியமனம்-

eகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஆர்.எல்.ரணவீர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை 12 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்றையதினம் முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலர் ஜனவரியில் ஜெனீவா விஜயம்-

ஐ.நா மனித உரிமை பேரவையின் 2014 மார்ச் அமர்வுக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள சாதனைகளைப்பற்றி அரசாங்கம் இரு முக்கிய விளக்கங்களை அளிக்கவுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு பொறுப்பாகவுள்ள ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஜனவரியில் ஜெனீவா சென்று பல்வேறு நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையிலுள்ள இராஜதந்திர நிறுவன தலைவர்களுக்கும் இது தொடர்பான விளக்கமளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

இணையத்தில் நிதி மோசடி என கணினி அவசர பிரிவு எச்சரிக்கை-

இணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்தப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். மின் அஞ்சலை பயன்படுத்தி சிலர் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையர் ஐவருக்கு பாகிஸ்தான் உயர்கல்வி புலமைப்பரிசில்-

hபாகிஸ்தானில் உயர்கல்வி கற்பதற்காக இலங்கை மாணவர்கள் ஐந்து பேருக்கு புலமைப்பரிசில்களை அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது. உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டம் 2013இன் கீழ் இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பாகிஸ்தானிலுள்ள பிரபல்யமிக்க பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய துறைகளில் உயர்கல்வியை மேற்கொள்ள முடியும். இந்த கற்கைநெறிகளை மேற்கொள்ளும் காலப்பகுதியில் தேவையான அனைத்து நிதி வசதிகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் வழங்குகின்றனது. இத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரான ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காஷிம் குரேஷி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதுபோன்றே பொறியியல் மற்றும் மருந்தகம் ஆகிய துறைகளில் இலங்கை மாணவர்கள் உயர் கல்வியை மேற்கொள்ள பாகிஸ்தான் புலமைப்பரிசில் வழங்குகின்றது. இதற்கு மேலதிகமாக 150 பாடசாலை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம், ஜின்னா புலமைப்பரிசில்களை வருடாந்தம் வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் மனிதப் புதைகுழி தோண்டும் பணி நிறுத்தம்-

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்றுத் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை வரை புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீட்கப்பட்ட 11 மண்டையோடுகளையும் பரிசோதனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, குடிதண்ணீர் குழாய் இணைப்பு வேலைகளுக்காக மன்னார் திருக்கேதீஸ்வரத்தை அண்டிய பகுதிகளில் வீதியின் அருகே மண்ணைத் தோண்டியபோது அங்கு மனித மண்டை யோடுகள், மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெற்றன. கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களும் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் வேகமாக இடம்பெற்றன. இதன்மூலம் இங்கு புதைக்கப்பட்டிருந்த 11 மண்டையோடுகள், எலும்புகள் என்பன மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று புதைகுழி தோண்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி பிரதேச செயலக பட்டதாரிகள் போராட்டம்-

dயாழ். சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுநர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தால் 51 ஆயிரம் பட்டதாரிகள் கடந்த ஆண்டில் பிரதேச செயலகங்களுக்கு பயிலுநராக இணங்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பட்டதாரிகளுக்கு கடந்த மாதத்திற்கு முன்னர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளுள் சாவகச்சேரி பிரதேச செயலகம் தவிர்ந்த 14 பிரிவுகளுக்கும் கடந்த 15ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாலும், அரச அதிகாரிகளாலும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நியமனங்கள் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் எதுவும் விடுக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தபோதிலும், கடந்த நாட்களில் தமக்கும் நியமனம் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். Read more

வடலியடைப்பு சைவப் பிரகாசா வித்தியாலய கட்டிடத் திறப்புவிழா-

iயாழ் வடலியடைப்பு சைவப் பிரகாசா வித்தியாலயத்தின் கட்டிடத் திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்றையதினம் காலை 9மணியளவில்; ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் திரு. வ.அம்பலநாதர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டு பாடசாலைக் கட்டிடத்தினை திறந்து வைத்தார். பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சந்திரராஜா, சண்டிலிப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.சிவானந்தராஜா ஆகியோரும், கௌரவ விருந்தினராக சமுர்த்தி உத்தியோகத்தர் பாலமுரளி அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து பாடசாலைச் சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலைச் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேற்படி கிராமத்துடன் தொடர்புடைய புலம்பெயர்ந்தவர்களும் பாடசாலையின் பழைய மாணவர்களும் இணைந்து இந்தக் கட்டிடத்தை நிர்மாணித்திருந்தனர்.

a b c d e f g hj