Header image alt text

ஹிருணிகாவின் வாகனத்தில் கடத்தல், அறுவருக்கு விளக்கமறியல்-

courtsகொழும்பு, தெமட்டகொடை கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 வயதான ஒருவரைக் கடத்தி, தாக்கியதோடு, அநாதரவாக விட்டுச் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அறுவர் நேற்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததை அடுத்து கைதுசெய்யப்பட்டனர். முன்னதாக, சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் டிபென்டர் ஒன்று கைப்பற்றப்பட்டதோடு, அது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானது எனவும் தெரியவந்தது. இதேவேளை இந்த விடயம் குறித்து நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த ஹிருணிகா, தெமட்டகொடை பிரதேசத்தில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தனது டிபென்டர் பயன்படுத்தப்பட்டது உண்மை எனினும், அது தனது அனுமதியுடன் செய்யப்பட்ட ஒன்றல்ல என தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் பணிபுரியும் பாதுகாப்பு தரப்பினரிடம் வந்த, ஒருவர் தனது மனைவி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறியதோடு, கடத்தல்காரர் இருப்பதாக கூறப்படும் இடம் தனக்கு தெரியும் எனவும் குறிப்பிட்ட நிலையில், தனது சேவையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சென்றதாக ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார். Read more

ரக்னா லங்கா நிறுவன மோசடி விசாரணை இறுதிக் கட்டம்-

inquiryரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நூற்றுக்கு 80 வீதமான விசாரணைகள் இதுவரை நிறைவடைந்துள்ளதாக, ஆணைக்குழுவின் செயலர் லெசில் டிசில்வா குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எவன்காட் நிறுவனத் தலைவர் நிஸங்க சேனாதிபதியின் வாக்குமூலத்தை ஜனவரி 3ம் திகதிக்கு பின்னர் பெற, நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது. இதுஇவ்வாறு இருக்க முன்னதாக சில சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்குமாறு நிஸங்க சேனாதிபதிக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்தது. எனினும் சுகயீனம் காரணமாக ஜனவரி 3ம் திகதி வரை ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என அவரது சட்டத்தரணி தெரியப்படுத்தியுள்ளதோடு, அது குறித்த வைத்திய அறிக்கையையும் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார் என லெசில் டி சில்லா தெரிவித்துள்ளார். இதன்படி ஜனவரி 3ம் திகதிக்கு பின்னர் நிஸங்கவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தீ மூட்டிய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு-

dead.bodyதீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணுவில் பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும், கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுதாகரன் லதுசாயினி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்றதால், சக மாணவிகள் கேலி செய்துள்ளனர். இதனால் மனவிரக்தியடைந்த மாணவி, கடந்த 03ஆம் திகதி இரவு தனக்குதானே தீ மூட்டிக்கொண்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர், உடனடியாக அவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தங்கம் கடத்த முற்பட்ட அமைச்சின் இணைப்புச் செயலாளர் கைது-

goldஇரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதி மிக்கதான (400 கிராம்) தங்க பிஸ்கட்கள் நான்கை கடத்த முற்பட்டதாக கூறப்படும் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர், இலங்கைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தில் வைத்து அவர் கைதாகியுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் இன்று அதிகாலை 01.30 அளவில் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்ததாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 42 வயதான குறித்த சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

வாகன விபத்துக்களில் 2,666 பேர் மரணம்-

accidentஇவ்வருடத்தின் இதுவரையிலுமான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 ஆயிரத்து 666 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு நடவடிக்கைளுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் அமரசிறி சேனாரத்ன இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பலியானவர்களில் உந்துருளியில் பயணித்தோர் 968 பேர் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த 19 நாட்களில் மாத்திரம் மேல் மாகாணத்தில் வீதி ஒழுங்குகளை மீறிய 54 ஆயிரத்து 93 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பிரதி காவல்துறை மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழில் சட்டவிரோத ஆவணங்கள், போதைபொருட்களுடன் 4 பேர் கைது-

arrest (30)ஹெரோயின் போதை பொருட்கள் மற்றும் சட்டவிரோத கடவூட்சீட்டுக்களை தம்வசம் வைத்திருந்த நான்கு பேர் யாழ்ப்பாண காவல்துறையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த அதி சொகுசு ரக சிற்றூர்தி ஒன்றையும் காவல்துறையில் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து, கஞ்சா, ஹெரோயின் வகையை சேர்ந்த திரவ போதைப் பொருட்கள், துகள் வடிவிலான போதைப் பொருட்கள் மற்றும் அவர்களது உரிமையற்ற வெளிநாட்டு கடவூச்சிட்டுக்கள் ஜந்தும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் கிரான்பாஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தொழிற்சாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 15 பேர் காயம்-

fireகளுத்துறை மாவட்டம் பாணதுறை வாழைத்தோட்டம் பிரதேசத்திலுள்ள வர்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தி தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 15பேர் காயமடைந்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இடம்பெற்ற இந்த விபத்தில், காயமடைந்தவர்கள் பாணதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றுகாலை 10மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஹிருணிகாவுக்கு சொந்தமான வாகனத்தில் ஆட்கடத்தல்-

hirunikaகொழும்பு, தெமட்டகொடை பகுதியில் 34 வயதான ஒருவரைக் கடத்தி, தாக்கியதோடு, அநாதரவாக விட்டுச் சென்ற அறுவர் பயணித்ததாக கூறப்படும், டிபென்டர் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது.

சுமார் 12 நாட்களுக்கு முன்னதாக குறித்த டிபென்டர் அவரது பெயரில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். Read more

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் 6மாதங்களுள் தீர்க்கப்படும்;-ஜனாதிபதி-

maithripala3வட மாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளை 6மாதங்களில் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் உறுதி வழங்கியுள்ளார். அதற்காக விசேட செயலணியொன்றை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யாழ் மாநரசபை மைதானத்தில் நேற்றுமாலை நடைபெற்ற தேசிய நத்தார்தின விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றிய, ஜனாதிபதி, யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களுக்கு அறிவிக்காமலேயே சென்று பார்வையிட்டாக கூறினார் 25 வருடங்களுக்கு முன் தாம் வாழ்ந்த பிரதேசங்களுக்கு தம்மை அனுப்பி வைக்குமாறே அனைவரும் தன்னிடம் கோரிக்கை விடுத்தாக ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்புவோர் யாழ்ப்பாணத்திற்கு வந்து நிலமைகளைப் பார்க்குமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, சமாதானம் ஏற்பட்டாலும் யுத்தம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து அரசியல் கைதிகள் விசனம்-

jail.......தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து விசனம் அடைவதாக தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர். பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில் கடந்த 10ஆம் திகதியில் இருந்து கைதிகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும், முன்னிலையாகும் ஒவ்வொரு தடவையும் தமது வழக்கு விசாரணைக்கான திகதி குறிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 13 கைதிகள் விசேட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தடைவ முன்னிலைப்படுத்தப்படும் போதும் தமக்கு எடுத்த வழக்கு விசாரணைக்கான திகதிகள் மாத்திரம் கொடுக்கப்படுவதாக கைதிகள் தெரிவிக்கின்றனர். அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்திலே விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

xccதென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு வாட் பிளேஸில் அமைந்துள்ள பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று காலை 9.30மணியளவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோர் தெரிவித்ததாவது, எங்களுக்கு போதியளவு வசதிகள் இல்லை. எமது பல்கலைக்கழக அமைவிடமும் பொருத்தமானதாக இல்லை. இது பற்றி கடந்த அரசாங்கத்திடமும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திடமும் எழுத்து மூலமாக பல கோரிக்கைகளை, பல தடவைகள் முன்வைத்தோம், ஆனால் அதற்கான எந்த விதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர் கடந்த 10ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதற்கான தீர்வு கிடைக்காமையினாலேயே மீண்டும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கும் தீர்வு கிடைக்காவிடின் மேலும் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, இந்த பல்கலைக்கழகத்தில் வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் பலரும் கல்வி கற்கின்றனர்.

27 அரசியல் கைதிகளுக்கு ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியல்-

jailகொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 27பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி அருணி ஆட்டிக்கல முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியல் கைதிகளில் சிங்களவர்களும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பிரான்ஸிலுள்ள ரூபன் என்பவரின் தகவலுக்கு அமையவே இவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான போதிய சாட்சியங்கள் இல்லையெனவும் நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிங்கள அரசியல் கைதிகள் தொடர்பான கூடுதல் சாட்சியங்களை பதிவுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் சட்டத்தரணிகளுக்கு பணித்துள்ளார். இதனைடுத்தே 27பேர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

ரக்பி வீரர் தாஜுடீன் படுகொலை தொடர்பாக குணவர்தனவிடம் விசாரணை-

tajudeenரக்பி வீரர் வசிம் தாஜுடீன் படுகொலை சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅதிபர் எஸ்.கே.டி.எஸ் குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தாஜுடீன் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் அவர் கொழும்பிற்கு பொறுப்பாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலதிக தகவல்களுக்காக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இவரும் வசிம் தாஜுடீன் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் நாரஹென்பிட்ட மற்றும் கிருலப்பனை பொலிஸ் நிலையங்களுக்கான பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்துள்ளார்.

நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆணைக்குழுவில் ஆஜர்-

kamaliநீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கமலினி டி சில்வா பாரிய ஊழல் மோசடி தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். சர்வதேச இணக்க சபை ஆரம்பிக்கும்போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பான விசாரணைக்களுக்கே நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆஜராகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஏற்கனவே பலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாரிலிருந்து வந்த மகனைக் காணவில்லையென தந்தை முறைப்பாடு-

xzccகடந்த 13ஆம் திகதி, கட்டாரிலிருந்து நாடு திரும்பிய இளைஞன், இதுவரை வீடு திரும்பவில்லை என்று, காணாமல்போன இளைஞனின் பெற்றோர், வவுணதீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, மட்டக்களப்பு – புதுமண்டபத்தடி, கன்னன்குடாவைச் சேர்ந்த நவரெட்ணம் குணராஜன் (வயது 22) என்பவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் கட்டார் நாட்டுக்குச் சென்றுள்ளார். எனினும், அங்கு சென்ற பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, அவர் கடந்த 13.12.2015 அன்று நாட்டுக்கு திரும்பியுள்ளார். அன்றைய தினம் நள்ளிரவு 12.40 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். எனினும், அவரை அழைத்து வரச்சென்ற தந்தை, வெகுநேரமாகக் காத்திருந்தும் தனது மகன் வராததால், அங்குள்ள விமானநிலையப் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். Read more

அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் இலங்கைக்கு விஜயம்-

nisha thesai biswalதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமெரிக்க உதவிச் செயலாளர் நிஷர பிஸ்வால், இன்று அதிகாலை 5.30அளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தடைந்த இவரை, வெளியுறவு அமைச்சு மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை-

sri lankaஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலம் நீக்கப்பட்டு அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள தேசப்பற்றுச் சட்டம் போன்றதொரு சட்டத்தை உருவாக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 1977ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டதுடன் பல தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நியாயப்படுத்தி பேசிய பலர் கைதுசெய்யப்பட்டதுடன் தமிழ் மக்களின் பேச்சு சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் பறிக்கப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் அழிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த சட்டமூலத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள்மீது தொடர்ச்சியான அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள்-

parliamentபுதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்களை அறிந்துகொள்ளும் வகையில் 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த குழுவுக்கான மூன்று பிரதிநிதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவில் பிரதிநிதித்துவம் பெறும் 19 பேரும் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். எனினும் அந்தப் பிரதிநிதிகளை அரசியல் கட்சிகளே பெயரிடவுள்ளதாகவும் தெரியவருகிறது. அதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தலா ஏழு உறுப்பினர்களை நியமிக்கவுள்ள அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று உறுப்பினர்களையும் மக்கள் விடுதலை முன்னணி இரு உறுப்பினர்களையும் நியமிக்கவுள்ளன. நியமனம்பெறும் உறுப்பினர்கள் நாடுபூராகவும் சென்று புதிய அரசியலமைப்பு பற்றிய பொதுமக்களின் கருத்துக்களைப் பெறவுள்ளனர். புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக நியமிக்கும் பிரேரணை ஜனவரி 9ம்திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் தமிழ் மக்கள் அவை-

567676767வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களது தலைமையில் தமிழ் மக்கள் அவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் முதலாவது கூட்டம் நேற்று யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ்மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், பொருளாதாரத்தை வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல மக்கள் நலப் பணிகளை நோக்காக கொண்டு இது உருவாக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

sushma suvarajஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள விடயத்தை, சுஷ்மா சுவராஜ், இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து ஏற்கனவே கூறி இருந்தார்.

சிறுவர் இல்லங்களின் தரத்தினை மேற்பார்வை செய்ய நடவடிக்கை-

nattasha balendranசிறுவர் இல்லங்களின் தரம் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. குறிப்பாக சிறுவர்கள் தங்வைக்கப்படும் இல்லங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார். சில சிறுவர் இல்லங்ஙகளிலிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் நட்டாஷா பாலேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுத்திகரிப்பாளர்கள் போராட்டம்-

airportகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சுத்திகரிப்பு செய்யும் தொழிலாளர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக, விமானநிலையத்தின் வழமையான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக, விமான நிலையத்தின் சுத்திகரிப்பு மற்றும் பயணிகளின் பொதி பரிமாற்ற செயற்பாடுகள் ஸ்த்தம்பித்துள்ளன. விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் 90க்கும் அதிகமான ஊழியர்கள் இந்த போராட்டத்தை மேற்கொள்கின்றனர். தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தாமதித்துள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்காலிக பணியாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வேலைகள் சுமுகமாக இடம்பெறுவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தலைமன்னாரிலிருந்து படகில் தங்கம் கடத்தல், மீனவர் கைது-

arrestதலைமன்னார் உருமலை கடற்பகுதியில் மீன்பிடி படகொன்றிலிருந்து 5 கிலோகிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்ட்டன் அலவி அக்ரம் குறிப்பிட்டுள்ளார். குறித்த படகிலிருந்த மீனவரொருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு கைப்பற்றப்பட்ட தங்கத்தை சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மற்றும் புத்தளத்தில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம்-

errtrtrவவுனியா மற்றும் புத்தளத்தில் இருவேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை பொதுமக்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கட்டாக்காலி மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்தவும், நெடுஞ்சாலைகளில் கட்டாக்காலி மாடுகள் நடமாடுவதை கட்டுப்படுத்தவும் எனக் கோரி வவுனியாவில் பொதுமக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா- திருமலை வீதியின் கச்சக்கொடித்தீவு பிரதேசம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்தும் சற்று நேரம் தடைப்பட்டிருந்தது. இதற்கிடையே புத்தளத்தின் மதுரங்குளி மொக்குத்துடுவாய் பாதையை சீரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து புத்தளம்- கொழும்பு பிரதான பாதையில் பொதுமக்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

வரவுசெலவு திட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்-

parliamentதேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால், நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 பேரும் எதிராக 51 பேரும் வாக்களித்தனர். 13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதன்படி, இவ்வரவு செலவுத் திட்டம் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர். எனினும், லக்ஷ்மன் செனவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ, அலிஸாஹிர் மௌலான, எம்.கே.டி.எஸ், குணவர்தன, பிரேமலால் ஜயசேகர, கீதா குமாரசிங்க, விமல் வீரவன்ச, ஜனக்க பண்டார தென்னகோன், நடேசன் சிவசக்தி, மனுஷ நாணயக்கார, செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான நிதி அன்பளிப்பு-

r7பிரமந்தனாறு பரந்தன் கிளிநொச்சியைச் சேர்நத திரு.ரங்கநாதன் ராகவன் என்பவருக்கான சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரது மனைவி திருமதி. சுமித்திரமலர் ராகவன் அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நேற்றைய தினம் சங்க தலைமை காரியாலயத்தில் வைத்து அவர்களது வங்கி கணக்கில் ரூபா 50,000 வைப்பிலிடப்பட்டு அதற்கான பற்றுச்சீட்டு முன்னாள் சங்கத் தலைவர் திரு.இராஜயகோபால் குகன் அவர்களால் வழங்கிவைக்ப்பட்டது. இவருக்கான சத்திர சிகிச்சை நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாலை 2.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. இவ் அறுவை சிகிச்சைக்கான பண உதவி புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சு.மேனகுமார் மற்றும் கனடாவில் வசிக்கும் நண்பர் ஆகியோரினால் வழங்கப்பட்டது. இவ் கருணை செயலைப் புரிந்த புலம்பெயர் உறவுகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். (வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம்)

யாழில் மற்றுமொரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படும்-பிரதமர்-

ranilயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் மற்றுமொரு தொகுதி விடுவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரால் பொது மக்களின் காணிகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவற்றை விடுவிப்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன்முடிவு எதிர்வரும் ஜனவரி மாதம் தெரியவரும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு-

kiriyellaஇலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படும் என அந்நாட்டு நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். எனினும், இந்த உத்தேச திட்டத்திற்கு இலங்கை இணங்காது காரணம் இலங்கை மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர் என்றும் அமைச்சர் கிரியல்ல கூறியுள்ளார்.

இலங்கை இந்தியாவிற்கு பெறுமதிமிக்க பங்காளி-சுஷ்மா சுவராஜ்-

sushma suvarajஇனப்பிரச்சினை சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுடன் காணப்படுகின்ற இருதரப்பு உறவை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இலங்கை இந்தியாவிற்கு பெறுமதிமிக்க பங்காளி என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே சுஷ்மா சுவராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்தியாவுடனான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. தற்போதைய இந்திய அரசாங்கத்தின் நோக்கம், சர்வதேச நாடுகளுனான உறவை பலப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாகரை விபத்தில் கணவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம்-

eerereமட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட கணவனும் மனைவியுமே இவ்வாறு விபத்திற்குள்ளாகினர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வாகரை கஜீவத்தை என்னும் இடத்தில் பாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது மட்டக்களப்பு கல்லடி வேலூரைச் சேர்ந்த க.விவேகானந்தராசா (52) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி ரஞ்சிதம் விவேகானந்தராசா (49) காயமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் வாகரை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுழிபுரத்தில் தோழர் சுப்புவுக்கு அஞ்சலி நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

20151213_163201_resizedவலிமேற்கு பிரதேச ஆதரவாளர்களால் அண்மையில் ஜேர்மனியில் அமரத்துவமடைந்த தோழர் சுப்புவுக்கு (கார்த்திகேசு சிவகுமாரன்) கடந்த 13.12.2015 அன்று சுழிபுரத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன், வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், வலி மேற்கு மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், வலிமேற்கு பிரதேசசெயலக கிராமசேவை உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தோழர் சுப்புவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை சூட்டி நினைவுச்சுடரினை ஏற்றி வைத்ததைத் தொடந்து கழகத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். Read more

சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்க ஜப்பான் முயற்சி-

electricityதிருகோணமலை மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சம்பூரில் ஜப்பான் நிறுவனம் ஒன்று அனல்மின் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பூரில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மீள்குடியேற்ற பகுதியான 818 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து 515 ஏக்கர் பகுதியை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் நிறுவனம் கோரிக்கை முன் வைத்துள்ள பகுதி மக்களின் வயல் காணிகள் என மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் அனல்மின் நிலையத்தை சம்பூரிலிருந்து மாற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சம்பூரில் மின் நிலையத்தை அமைப்பதற்கு ஜப்பான் முயற்சித்து வருகின்றது. எனினும் மீண்டுமொரு அனல் மின்நிலையம் தமது பகுதியில் வர அனுமதிப்பதில்லை என மக்கள் கூறியுள்ளனர்.

ஊடகவியலாளர்களுக்கு தொடுதிரை கையடக்க தொலைபேசிகள்-

touch phoneஎதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடுதிரை கையடக்க தொலைபேசிகள் மற்றும் மானிய அடிப்படையிலான பெக்கேஜ் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கையடக்க தொலைபேசி மற்றும் புதிய பெக்கேஜ் ஒன்றும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல், பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணணிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாதுகாப்பான ரயில் கடவை அமைக்கவும், கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்-

trainபாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தருமாறு கோரி கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் மாத்திரம் பாதுகாப்பற்ற ரயில் கடவையினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்று மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உரிய பாதுகாப்பு கடவைகளை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு கடவைகளை அமைப்பதுடன், கடவைகளில் பாதுகாவலர்களை நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது-


pistolஅம்பாறை மாவட்டம் திருக்கோவில், காயத்திரி கிராமத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும்; ஒருவரை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மேற்படி கிராமத்திலுள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றியதுடன், மேற்படி சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களது தேவைகள் குறித்து ஆராய்வு-(படங்கள் இணைப்பு)

10579336_897577417022850_1686916654_oஅண்மையில் வவுனியாவில் பெய்த கடும்மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் பாதிக்கப்பட்ட கிராமங்களான புதிய கற்குளம், பழைய கற்குளம், சிதம்பரபுரம் மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த மக்களை வவுனியா பிரதேச செயலாளர் திரு.உதயராசா, வட மாகாண சபை உறுப்பினர் திரு. ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மக்களின் உடனடி தேவைகள், அனர்த்தத்தால் எற்பட்ட சேதங்கள், கிராமங்களின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. இவ் கலந்துரையாடலில் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Read more