viyalendranஇன்னும் கால நீடிப்பினை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வர்த்தக துறையினர் மற்றும் வர்த்தக துறை மாணவர்கள் உட்பட பல்வேறு துறை மாணவர்களை இணைத்து மட்டக்களப்பு வர்த்தக ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் மாலை மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள பி.பி.சி.கல்வி நிலையத்தில் மட்டக்களப்பு வர்த்தக யூனியன் தலைவரும் பிரபல ஆசிரியருமான கே.கே.அரஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்வில் விரிவுரையாளர்கள், அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரன் அவர்கள், மேற்கு நாடுகளில் சிறுபான்மை சமூகம் கௌரவமாக நடாத்தப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து ஐரோப்பா உட்பட பல நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அந்த நாட்டில் இருந்த பெரும்பான்மை சமூகம் அவர்களை கௌரவமாக அவர்களுக்கு சமமாக வழிநடத்துகின்றது. அதற்கு காரணம் அந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மை மக்களின் கல்வி ரீதியான வளர்ச்சி, சிந்தனை ரீதியான வளர்ச்சியேயாகும்.

ஒரு சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரும் சக்திகொண்டதாக கல்வி உள்ளது. உலகின் இரண்டாவது மகாத்மா காந்தியென போற்றப்படும் நெல்சன் மண்டேலா உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி என தெரிவித்துள்ளார். இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளில் உள்ள பெரும்பான்மையினத்தை சேர்ந்த பேரினவாதிகள், மதவாதிகள், சிறுபான்மை மக்களை நேசிக்கின்ற, கௌரவமாக நடாத்துகின்ற சிறுபான்மைக்கு நியாயமாக கிடைக்கவேண்டியவற்றை விட்டுகொடுக்கின்ற மனப்பாங்கு இல்லாமலே இருந்து வந்ததை வரலாற்று ரீதியாக நாங்கள் பார்த்துவந்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.