sfdfdஇலங்கையும் சீனாவும் இணைந்து முன்னெடுக்கும் ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் இலங்கை – சீன கைத்தொழில் மண்டலத் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த வைபவம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் வருகை தந்தமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது பாதுகாப்புப் பிரிவின் 11 உறுப்பினர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைத்தொழில் மண்டலத் திட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் வைபவம் நடைபெறும் பகுதிக்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு பொலிஸார் முயற்சித்தனர். எனினும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சிலர், கற்களால் தாக்கியதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். அமைதியின்மை ஏற்பட்ட இடத்திற்கு பிக்குகள் சிலரும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமற்போனதால் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டது. இதனையடுத்து, பொலிஸ் கலகத்தடுப்புப் பிரிவினரால் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் இலங்கை சீன கைத்தொழில் மண்டலத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர், இலங்கைக்கான சீனத் தூதுவர் இசியங் லியென், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.