gnanasaaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குமார்கள் மூவருக்கு எதிராக, ஹோமாகம நீதிமன்றில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம பொலிஸாரினாலேயே, கடந்த திங்கட்கிழமையன்று, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரர், வித்தாரன்தெனியே நந்த தேரர் மற்றும் எம்பிலிபிட்டியே விஜித்த தேரர் ஆகியோருக்கு எதிராகவே, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட மேற்படி பிக்குமார்கள், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ வாயிலாக, அதிவேக நெடுஞ்சாலைக்குள் பலவந்தமாக நுழைந்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளைத் தூற்றியதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்பையும் தாக்கியிருந்தனர்.

இதனால், 60ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கிணங்கவே, மேற்படி தேரர்கள் மூவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.