Sivajilingamஐந்து அம்சகோரிக்கையை முன்வைத்து 69வது சுதந்திர தினமான 04.02.2017 சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப் பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் விடயம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, மீளக் காணிகள் சுவீகரிக்கப்படக் கூடாது, இனப்படுகொலைக்கு நீதி, சர்வதேச விசாரணை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காலை 8 மணிமுதல் 10 மணிவரை அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.அதேவேளை தற்போதைய ஆட்சியிலும் யாழில் 1505 எக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். அந்தக் காணிகளை இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் பொஸிசாருக்கு ஒதுக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இவ் விடயம் ரகசியமாக செய்யப்பட்ட விடயம் என்றும் இப்போது வடமாகாண சபைக்கு தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார். இதற்காக காணி ஆணைக்குழுவின் முன்னாள் இணைப்பாளரும் தற்போது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமான ராஜபக்ஷ இம் மாதம் 09 ஆம் திகதி யாழ் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதாக அவர் கூறினார்.