sasikalaபோயஸ்கார்டனில் 3 மணி நேரம் நடந்த சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிற்பகலில் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக வரும் 9ம் தேதி பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே, அவருக்கு எதிராக அமைச்சர்கள், எம்பிக்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.  குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முதல்வர் பதவி ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று பகிரங்கமாக கூற ஆரம்பித்தனர்.

நிலையில், ஜனவரி 29ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.  
அதாவது, கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவரே  ஆட்சியை வழிநடத்த வேண்டும். அதனால் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று வெளிப்படையாக பேச தொடங்கினர். சசிகலாவின் தூண்டுதலின் பேரில் தான் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவித்தனர். 

ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்களே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தனர். சசிகலா முதல்வர் ஆனவுடன் அமைச்சரவை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். சசிகலாவை போயஸ் கார்டனில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.   

சசிகலா 9ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 4 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பணியை ஒழுங்காக செய்யுமாறு அமைச்சர்களை கண்டித்தார். மேலும் மற்ற அமைச்சர்களை பற்றி கவலைப்படாமல், தன் பணியை தொடர்ந்து செய்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 60 நாட்கள், அதாவது நேற்று வரை தமிழக முதல்வராக ஓபிஎஸ் நீடித்து வந்தார். இந்த சூழ்நிலையில் பிப்ரவரி 5ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்  நடைபெற்றது அதில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தன்னை ராஜினாமா செய்யச் சொன்னால் என்ன செய்வது என்று தனது ஆதரவாளர்கள் மற்றும், டெல்லியில் உள்ள சில முக்கிய விஐபிக்களிடம் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம், தான் திறமையாக ஆட்சி நடத்துவதாகவும், கட்சிக்கு தற்போது நல்ல பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், தான் சசிகலாவுக்கு எப்போதும் கட்டுப்பட்டு நடப்பதால், தற்போதைய அமைச்சரவையே தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு அனுமதிக்காவிட்டால், தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வேண்டாம். அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவதாக தெரிவித்தார். இதனால், அவரை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சமாதானப்படுத்தினர். துணை முதல்வர் பதவி வழங்குவதாகவும் சமாதானம்.

அதைத் தொடர்ந்து, தனது முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்ததாக கூறப்படுகிறது. அந்தக் கடிதம் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:
என்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக நான், என்னுடைய தமிழ்நாடு முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன். தயவு செய்து என்னுடைய ராஜினாமாவை ஏற்று கொள்ளுங்கள். அதே நேரத்தில் என்னால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுவில் உள்ளவர்களையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இதில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக, சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்எல்ஏக்கள் கூட்டம் முடிவடைந்ததும் சசிகலா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒதுங்கியே இருந்தார்.அமைச்சர்கள் நின்றிருந்த கூட்டத்தில் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, சசிகலா தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில் அதிமுக  சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அவர் எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். அதைத் தொடர்ந்து சசிகலா கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள மாடியின் பால்கனிக்கு வந்து தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து போயஸ்கார்டனுக்கு புறப்பட்டு சென்றார். 

தொடர்ந்து ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் சசிகலாவுக்கு அழைப்பு விடுப்பார். அதன் பேரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும். அதாவது பதவியேற்பு விழா 7ம் தேதி(நாளை) அல்லது 9ம் தேதி தைப்பூசம் என்பதால் அன்றைய தினத்தில் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன 

சசிகலா அதிமுகவில் 5வது முதல்வராகவும், பெண் முதல்வர்களில் 3வது முதல்வராகவும் பதவியேற்க உள்ளார். தற்போது எம்எல்ஏவாக சசிகலா இல்லை. இதனால், அவர் 6 மாதத்திற்கு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.