policeகடல் மார்க்கமாக, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்துவதைத் தடுப்பதற்கு, இரவு மற்றும் பகல் நேரங்களில் கடற்படையினரின் ரோந்துப்பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ஜெயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ். காங்கேசன்துறை கடற்படைத் தலமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் போதை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், முப்படையினரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் அதிகளவு போதைப்பொருள், வடக்கு கடல் மார்க்கமாகக் கடத்தப்படுவதாக, பல்வேறு தரப்பினராலும் கூறப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் கடற்படை வீரர்களும் புலனாய்வுத் துறையினரும் கடற்கரையோரங்களில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடம் 1,000 கிலோகிராமுக்கு அதிகமான கஞ்சாவினைக் கைப்பற்றியுள்ளோம்.

இவற்றைத் தவிர, போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டு, பொலிஸார் ஊடாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பருத்தித்துறைக்கு வடமேற்கே, நாட்டுப்படகு மூலம் யாழ்ப்பாணத்துக்கு ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்த முற்பட்ட ஆறு பேர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 13.5 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீன்பிடிக்கும் வடகடலில், அதிகளவு மேற்கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மீனவர்களுடன் மீனவர்களாக இலங்கைக் கடற்பரப்புக்குள் உட்பிரவேசிப்பதனைத் தடுப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

குறிப்பாக பகல், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், கடற்படையினரின் ரோந்து இரண்டு மடங்குளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமான முறையில் வரும் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளைச் சோதனை மேற்கொள்ள, கடற்படை வீரர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.