shotதிருட்டு வழக்கில் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ். நீதிமன்றில் இருந்து தப்பியோடிய சம்பவத்தினால் நீதிமன்றில் பரப்பு நிலவியுள்ளது. யாழ். பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் நீதிமன்றில் உள்ள சிறைக்கூடத்தில் இடம் பற்றாக்குறை காரணமாக மன்றின் அருகாமையில் உள்ள இருக்கையில் இருத்தி வைக்கப்பட்டபோது, அவர் சிறைச்சாலை உத்தியோகத்தருக்குத் தெரியாமல் நீதிமன்றில் நின்ற பொதுமக்கள் போன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்றவரை மீண்டும் கைது செய்வதற்காக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை கம்பஹா அத்தனகல்ல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். வழக்கு விசாரணைகளுக்காக இன்று குறித்த சந்தேகநபர், நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இதன்போது, தப்பிச் செல்ல முற்பட்ட அவர் மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார். மேலும், காயமடைந்த குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.