நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையை அடுத்து, கேகாலை – யட்டியாந்தோட்டை பகுதியில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 60 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளிலுள்ள 18 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் சமன் அநுர தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் கூறினார். பலத்த காற்று காரணமாக வீதிகளில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பலத்த காற்று காரணமாக தடைப்பட்ட மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதங்கள் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் சமன் அநுர சுட்டிக்காட்டினார்.