மட்டக்களப்பு கல்முனை வீதி தாளங்குடா சந்தியில் இன்றுகாலை இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளியான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.ஆறுமுகம் (வயது57) மரணித்து விட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தாளங்குடாவிலிருந்து காத்தான்குடி நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது மோதியதுடன் வீதி மருங்கிலிருந்த மரம் மற்றும் கொங்கிறீட் கற்குவியல் என்பவற்றில் மோதி நின்றது. இச்சம்பவத்தில் காரை செலுத்திய வங்கி முகாமையாளரும், கூலித் தொழிலாளியும் காயமடைந்து ஆரையம்பதி வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் படுகாயங்களுக்குள்ளான கூலித் தொழிலாளி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.