 தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரி மூன்றாவது நாளாக இன்றும் அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரி மூன்றாவது நாளாக இன்றும் அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது. 
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேவர்லி தோட்ட பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை இருவரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் குறித்த இருவரும் தொடர்ச்சியாக இரவு பகலாக எவ்வித உணவும் இன்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறித்த பிரதேசத்தில் தோட்ட நிர்வாகங்கள் தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காமலும், தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்காமல் இருப்பதை கண்டித்தும், 15 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.
இதனை ஆதரித்து அப்பகுதியில் உள்ள தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் ஆதரவு வழங்கி வருகின்றனர். மூன்று நாளாக மலையக அரசியல்வாதிகள் மற்றும் ஏனையவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தினால் தோட்ட தொழிலாளர்கள் ஆத்திரமுற்று 200ற்கும் மேற்பட்டவர்கள் டயகம தலவாக்கலை பிரதான வீதியை மறித்து சில மணி நேரம் தங்களின் கண்டனத்தை இன்று வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வராத பட்சத்தில் சகலரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை உண்ணாவிரதத்தில் ஈடுபடும் இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
