வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு கொண்டுவருவது தேசவிரோத செயற்பாடு என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான அவசியமோ, அவகாசமோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்று நாடு திரும்பிய நிலையில், கொழும்பில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் வழங்கிய தீர்ப்பு இலங்கையின் நீதித்துறை தொடர்பாக சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. இவ்வாறானதொரு சட்ட கட்டமைப்பை கொண்டுள்ள நாட்டுக்கு, சுயாதீனமாக செயற்படக்கூடிய தன்மையும், தேவையும் உள்ளது என வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சர்வதேச நீதிபதிகளைக் கொண்டுவரவேண்டுமாயின், அதற்கான செயற்பாடு மிகவும் பரந்தளவானது. முதலாவதாக உயர்நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். மூன்றாவதாக, மக்கள் கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும். இதற்கமைய, அரசியலமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.