மரணதண்டணையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசாங்கம் தொடரவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையிலுள்ள பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து நோர்வே சுவிட்சர்லாந்து பிரிட்டன் மற்றும் கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தூதரகங்களுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் போதைப்பொருளிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக 43வருடங்களின் பின்னர் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவது உலக நாடுகளிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்பதையும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை மரண தண்டனைகள் மூலம் இந்த வகை குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ஆபத்தை எதிர்கொள்வதில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு உள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள தயார் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பல்வேறு வகையிலான நீதித்துறைகளை பாரம்பரியங்களை கலாச்சாரங்களை மத பின்னணிகளை கொண்ட பெருமளவிலான உலகநாடுகள் மரணதண்டனையை ஒழித்துள்ளன எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மரணதண்டனை மனித கௌரவம் மற்றும் நேர்மை ஆகியவற்றை மறுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 2018 டிசம்பரில் ஐ.நா பொதுச்சபையில் வாக்களித்தபடி இலங்கை மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை தொடரவேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.