தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லொறியில் வெடி பொருட்கள் இருந்ததா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஷங்கிரி-லா ஹோட்டல்மீது தற்கொலை குண்டு தாக்கிய நபரின் பெயரிலேயே குறித்த லொறி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். Read more
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மௌலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தின்பேரில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
விமான பயணிகள் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலைய பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும், இன்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீதித் தடைகளை ஏற்படுத்தி முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பலங்கொட, கிரிமொட்டிதென்ன பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்டபோது பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான வீதி வரைபடம் ஒன்று, பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான அனுமதிப்பத்திரங்கள் ஆறு மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னரான சோதனை நடவடிக்கைகளில், இதுவரை சந்தேகத்தின் பேரில் 76பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.
இலங்கையில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, சர்வதேச பொலிஸார் உள்ளிட்ட மேலும் 3 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்றையதினம் காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் இன்று மாலையில் அனைத்து மதத் தலைவர்கள் கூட்டத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பாணந்துறை கிளையின் முன்னாள் உப செயலாளர் நேற்றுக்காலை பண்டாரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர், வீதி அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு பிரிவின், உதவி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய போதே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.