மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (MCC) அபிவிருத்தி நிதியுதவிக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘அங்கீகாரம் அளிக்கும் அமைச்சரவையின் தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்கிறது. அரசாங்கத்தினது மற்றும் தனியார் துறையினது – அடையாளங் காணப்பட்ட தேவைகளுக்கான நிதியளிப்பின் ஊடாக குறைந்தது 11 மில்லியன் இலங்கையர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த உதவியை இலங்கையே கோரியிருந்தது. ‘இந்த நிதியுதவியினால் ஆதாரமளிக்கப்படும் திட்டங்களானது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்பதுடன், கொழும்பில் பொது போக்குவரத்தையும் மேம்படுத்தும். அத்துடன், மாகாண வீதிகளை மேம்படுத்த செயற்படும் என்பதுடன், காணி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையர்களின்காணி உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் தற்போதிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்புகளை விரிவாக்கழும் செய்யும்.

‘இலங்கை அரசாங்கம் இந்த நிதியுதவி ஒப்பந்தத்தின் வரைவொன்றை நிதியமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதுடன், அது தற்போது இலங்கை மக்களின் மீளாய்வுக்கு அங்கு கிடைக்கக்கூடியதாக உள்ளது. இந்த அபிவிருத்தி நிதியுதவியின் கீழ், அமெரிக்கா எந்தவொரு காணிக்கும் உரித்துடையதாகவோ அல்லது குத்தகையை கொண்டதாகவோ இருக்காது.

‘இந்த ஐந்து வருட நிதியுதவி ஒப்பந்தத்தின் அமுலாக்கம் முழுவதும் நிதியுதவி அளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இலங்கையே மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் செய்யும்

‘ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நிதியுதவி கைச்சாத்திடல் மற்றும் நாடாளுமன்ற அங்கீகாரம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

29 பங்காளி நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட எமது கொள்கைக்கு அமைய, இந்த நிதியுதவியை மீளாய்வு செய்து ஒப்புதலளிக்கும் சந்தர்ப்பம் இலங்கை நாடாளுமன்றதுக்கு கிடைக்கும் இலங்கையுடனான எமது பங்காண்மையை தொடர்வதற்கும் பொருளாதார வளர்ச்சியின் ஊடாக வறுமையை குறைப்பதற்கான இலங்கையின் முயற்சிகளில் உதவுவதற்கும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.