ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 9 பேருக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இரசியமாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்துவைக்கும் நோக்கில், கடத்தியமை மற்றும் கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான, சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிணை வழங்கப்பட்ட பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.