vnaயாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த நீதி கோரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றுகாலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். இதேவேளை, இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

மேலும் கிளிநொச்சியில் பொதுச்சந்தை மூடப்பட்டு இன்றைய தினம் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் முல்லைத்தீவிலும் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதுடன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றுகாலை கண்டனப்பேரணி இடம்பெற்றது.

வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனை சந்தையின் முன்பாகவிருந்து ஆரம்பமான இக் கண்டனப் பேரணி ஏ9 வீதிவழியாக வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றது. தாக்குதலில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் கேமச்சந்திரவுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து திருகோணலையிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றுகாலை 9.00 மணிக்கு ஆரம்பமான கண்டன போராட்டமானது 10.30 நிறைவுபெற்றதுடன் மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் நோக்குடன் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

kilin fddf ere vna