 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கலந்துரையாட இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் சேவை செய்யும் பெண் பணியாளர் ஒருவர், வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டு சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.
நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்துக்கு குடும்பத்துடன் சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தொடர்பில், கடத்தல்காரர்கள் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நிஷாந்த டி சில்வா முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
