Header image alt text

புதிய அரசில் மூன்று அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்-

ministerssssமங்கள் சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கமைய மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவும், விஜயதாச ராஜபக்ஷ நீதி அமைச்சராகவும், டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்ளும் பொருட்டே இவர்கள் பதவியேற்றதாக தெரியவருகின்றது.

விமல், தினேஷ், வாசு ஆகியோர் எதிர்க்கட்சி-

udayaபொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்ற விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார உட்பட்ட பலர், எதிர்க்கட்சியில் இருப்பதற்கு ஏற்கெனவே முடிவெடுத்துள்ளதாக, பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலரும் எதிர்க்கட்சியிலேயே இருப்பர் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு, தேசிய அரசாங்கத்துடன் இருப்பதா அல்லது எதிர்க்கட்சியில் இருப்பதா என்று தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஏற்கெனவே அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

சங்கக்கார விடைபெற்றார், உயர்ஸ்தானிகர் பதவியேற்குமாறு கோரிக்கை-

sangaஇலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித்தலைவருமான குமார் சங்கக்கார, சர்வதேசப் போட்டிகளிலிருந்து இன்றிலிருந்து உத்தியோகபூர்வமாக விடைபெற்றார். இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவிலேயே அவர் ஓய்வுபெற்றார். சங்கக்கார விடைபெற்ற போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர், குமார் சங்கக்காரவுக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இதில் கலந்துகொண்டு குமார் சங்கக்காரவைக் கௌரவித்தனர். இந்தக் கௌரவிப்பு நிகழ்வின்போது கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, குமார் சங்கக்காரவுக்கு கோரிக்கை விடுத்தார். தனது நன்றியறிதல் உரையில், தனது கிரிக்கெட் வாழ்வில் பங்களித்த அனைவருக்கும் நன்றி செலுத்திய குமார் சங்கக்கார, இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அத்தோடு, அஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு அற்புதமானதொரு எதிர்காலம் காத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வலிமேற்கில் தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம் செயற்திட்ட உதவி-(படங்கள் இணைப்பு)

P1060805யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற செயற் திட்டத்தின் வாயிலாக ஜேர்மனிய புலம்பெயர் உறவுகளால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகுதிப் பொருட்களை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி திருமதி. காந்தநேசன் அவர்களிடம் முன்னாள் தவிசாளர் அவர்கள் கையளித்துள்ளார்.

Read more

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு-

tna (4)நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படாதிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட திரு. க.துரைரெட்ணசிங்கம் அவர்களும் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் இலங்கைக்கு விஜயம்-

nisha thesai biswalமத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பிலான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். ஒருநாள் விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டுக்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதே அவரின் இந்த விஜயத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இதன்போது நிஸா பிஸ்வால் ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே அவர் சில வாரங்களுக்கு முன்னர் இந்த விஜயத்தை மேற்கொள்விருந்தார். எனினும் தேர்தல்கள் காரணமாக விஜயம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

காணி விடுவிப்பை இனவாதிகள் பிழையாக பிரசாரம் செய்கின்றனர்-ஜனாதிபதி-

mutur presidentதென்னிலங்கை மக்களை காட்டிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் அதிக நெருக்கடியான நிலைமையில் வாழ்ந்து வருவதை தாம் அறிவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சம்பூரில் காணி உரிமைகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார். தென்னிலங்கையில் வசிக்கின்ற மக்கள் அனுபவிக்கின்ற அனைத்து சலுகைகளும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அத்துடன் யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைகொள்ளப்பட்ட பொது மக்களின் காணிகள் படிப்படியாக அவர்களுக்கே திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் போது, அதனை இனவாதிகள் சிலர் தவறான முறையில் பிரசாரம் செய்து வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிப்பதை ஏற்கமுடியாது-

caffeதேர்தலில் தோல்வியுற்றவர்களை தேசியப் பட்டியல் லம் தெரிவுசெய்வது தார்மீக அடிப்படையிலானது அல்ல என கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் சட்டத்தின்படி அது சட்டவிரோதம் இல்லை எனினும் தார்மீக அடிப்படையில் அது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஏழு பேரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இருவரும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து தலா ஒருவருமாக இம்முறை 11 பேர் தேர்தலில் தோற்ற நிலையில் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

லிபிய கடற்பிராந்தியத்திற்கு அப்பால் 2ஆயிரம் அகதிகள் மீட்பு-

refugeesலிபிய கடற்பிராந்தியத்திற்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த கப்பல்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகளும் அகதிகளும் மீட்கப்பட்டுள்ளனர். இத்தாலிய கரையோர காவல் படைத்தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் துரித நடவடிக்கையின் போது இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 இற்கும் மேற்பட்ட படகுகளில் இருந்து வெளியான ஆபத்து உதவி வானொலி சமிக்ஞக்கு அமையவே இவர்கள் மீட்கப்பட்டதாக இத்தாலிய கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். ஒரே நாளில் இந்த எண்ணிக்கையிலான சட்டவிரோத பயணிகள் மீட்கப்பட்டமை இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையான பயணிகளுடன் மற்றும் கடல்பயணத்திற்கு உகந்ததல்லாத படகுகளில் பயணித்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வருடத்தில் மட்டும் மரணித்துள்ளனர்.

சம்பூரில் காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதியால் கையளிப்பு-

sampur presidentதிருகோணமலை, சம்பூரில் இடம்பெயர்ந்த 234 குடும்பங்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையளிக்கப்பட்டுள்ளது. அரசினால் கையகப்படுத்தப்பட்ட 818 ஹெக்டேயர் பொதுமக்களின் காணி நேற்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியினால் காணி உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள காணியை சுத்தம் செய்வதற்காகா 13,000 ரூபா பணத்தை அரசினூடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு தலா 25,000 ரூபா பணமும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் ஆராயவுள்ளதாகவும் சம்பூர் மக்களை சந்தித்த போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஒரே கண்ணோட்டத்தின் கீழ் ஆராய்ந்து அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

மீசாலையில் மோட்டார் குண்டு மற்றும் கைக்குண்டு மீட்பு-

motor shellயாழ். தென்மராட்சி மீசாலை ஏரம்பு வீதியிலுள்ள காணியிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இக் குண்டு நேற்றுமாலை கண்டெடுக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாக்கேணி எனும் இடத்தில் நேற்றுமாலை கைக்குண்டு ஒன்றினை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த கிராமத்தில் உள்ள ஆலய உற்சவத்தினை முன்னிட்டு பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணியின்போது, பனை மரம் ஒன்றின் அடிப்பகுதியில் இருந்து குறித்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் ஊடாக குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவுக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்-

exam ....தேர்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட பரீட்சைகள் நாளை ஆரம்பமாகி செப்டம்பர் 8ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது. பரீட்சைகளில் முறைகேடு இடம்பெற்றால் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுள்ளார். இதனைவிட பரீட்சைகள் திணைக்களத்தின் தெலைபேசி இலக்கங்களான 0112 784208 அல்லது 0112 784537 என்ற இலக்கங்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாட்டினை பதிவுசெய்து கொள்ளமுடியும். இவ்வாறு பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவையை 30 ஆக வரையறுக்கத் தீர்மானம்-

parliamentபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 30 ஆக வரையறுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கைக்கு மேல் அமைச்சரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாயின் பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தின் தேவை கருதி அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கும் தேவையேற்படின், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்துவரும் சில தினங்களில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவைக்கான அங்கத்தவர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுவிலிருந்து ரி.பி. ஏக்கநாயக்க நீக்கம்-

ekanaikeசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு கடிதமொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க குறிப்பிட்டார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து இதுவரை நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சிறீலலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால ஆகியோரின் கையொப்பங்களுடன் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். எஸ்.எம். சந்திரசேன, பவித்ரா வன்னியாராச்சி, குமார வெல்கம ஆகியோருடன் தாம் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். தாம் உட்பட நால்வரும் கடந்த தேர்தலில் அவரவர் போட்டியிட்ட மாவட்டங்களில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்த ரி.பி. ஏக்கநாயக்க, நிறைவேற்றுக் குழுவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை மக்களின் நேர்மையான பங்களிப்பு குறித்து இத்தாலி ஆச்சரியம்-

italyஜனநாயக தேர்தல் ஒன்றுக்காக இலங்கை மக்கள் வழங்கிய நேர்மையான பங்களிப்பு தொடர்பாக தாம் ஆச்சரியம் அடைந்ததாக இலங்கைக்கான இத்தாலியின் புதிய தூதுவர் பாபலோ ஒன் ட்ரே பார்டோலி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்து தங்களின் சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கான இத்தாலியின் புதிய தூதுவர் பாபலோ ஒன் ட்ரே பார்டோலி உட்பட அமெரிக்க மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து தங்களின் சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். அந்த நாடுகளுடனான வலுவான தொடர்புகள் குறித்து அவதானம் செலுத்திய ஜனாதிபதி, வர்த்தக, முதலீட்டு மற்றும் சுற்றுலாத் துறைகளைத் தொடர்ந்தும் வலுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினர். சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தல் தொடர்பில் புதிய தூதுவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பஸ் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து-

ewrererகளுத்துறை மாவட்டம் ஹொரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் பகுதியில் வைத்து வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், குறித்த பஸ்ஸில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பஸ்ஸில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். பஸ் சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணமாகும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாறுபட்ட தளத்தில் பணியாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

Sithar ploteஎமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான மபெரும் அங்கீகாரம் எனக்கு வழங்ப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வாக்களித்த யாழ். கிளிநொச்சி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், விருப்பு வாக்குகள் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read more

இலங்கையின் 22ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம்-

ranil wickramaசுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற விசேட நிகழ்வில் சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். உலக அரசியல் வரலாற்றில் நான்காவது முறை பிரதமர் பதவி வகிக்கும் இரண்டாவது அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். இதற்கு முன்னர் பிரித்தானியாவின் வில்லியம் எவர்ட் க்லெஸ்டன் நான்கு தடவைகள் பிரதமராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வரலாற்றில் பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற பெருமைக்குரியவர் என்ற வகையில் நடந்து முடிந்த தேர்தலில் 5,00,566 விருப்பு வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார். பொதுத் தேர்தலில் 50,98,927 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் திகழும் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் நல்லாட்சியைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைக்க ஐ.தே.கட்சி சுதந்திரக் கட்சி உடன்படிக்கை-

UNP PAசமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் அதே நிகழ்வில் ஐதேக பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். அலரிமாளிகையில் ஊடகங்களிடம் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, சமரச தேசிய அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்தார். அதன்பின் நேற்று கூடிய சிறீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கம் அமைக்க இணக்கம் தெரிவித்த நிலையில் இன்று அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரதமர் பதவியேற்பு மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.

சபாநாயகராக கரு ஜயசூரியவின் பெயர் முன்மொழிவு-

karu jeyasuriyaபுதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரிய முன்மொழியப்பட்டுள்ளார். எதிர்வரும் 1ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவரது பெயர் அறிவிக்கப்படவுள்ளது. சபாநாயகரின் நியமனத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்குமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஐ.தே.கவின் தேசியப் பட்டியிலில் முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் புதிய நாடாளுமன்றத்தின் முதல் உறுப்பினராக கரு ஜெயசூரிய பதவியேற்கவுள்ளமை இங்கு குறிப்படத்தக்கது.

சங்கானையில் ஞானம் பவுன்டேசன் நிறுவனம் மக்களுக்கு அடிப்படை வசதி-(படங்கள் இணைப்பு)

P1060842யாழ். சங்கானைப் பகுதியில் ஞானம் பவுன்டேசன் நிறுவனத்தினரால் மலசலகூடமற்ற வீட்டுக் குடியிருப்பாளர்கட்கு மலசலகூடங்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். முன்னதாக சங்கானை முருகமூர்த்தி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் மேடைக்கு மங்களவாத்தியம் சகிதம் அழைத்துவரப்பட்டனர். இவ் நிக்ழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் உரையாற்றுகையில், எமது பிரதேசத்தில் இவ்வாறான மிக முக்கிய தேவையினை அறிந்து அதனை உரியமுறையில் நிறைவேற்றிய ஞானம் பவுன்டேசன் நிறுவனத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more

எமது பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் – புளொட் ஜேர்மன் கிளை-

ploteநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலே வடக்கிலும் கிழக்கிலும் கழகத்தின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எமது பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு ஆதரவளித்தமைக்காக தமிழ்; மக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். 

இந்த வெற்றிக்காகச் செயற்பட்ட நண்பர்கள், தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியினையும் பாராட்டுதலையும் தெரிவிப்பதோடு, வெற்றியடைந்த தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தோழர் சதாசிவம் வியாளேந்திரன் ஆகிய இருவருக்கும் எமது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மேலும் இவர்கள் இருவரும் எமது மக்களுக்கான சேவையினை தொடர்ந்து ஆற்றுவதற்கு கழகத்தின் ஜேர்மன் கிளை சார்பில் எமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்பதையும் உறுதிகூறுகின்றோம். Read more